தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு இன்று (12) நடைபெறும் விசேட அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் பெறப்பட்டு இன்றே வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட இருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
20 ஆவது திருத்தம் தொடர்பில் இறுதி முடிவு எட்டுவதற்காக இன்று மாலை ஜனாதிபதி தலைமையில் விசேட அமைச்சரவை கூட்டம் இடம்பெறுகிறது. இதன் போது உடன்பாடு எட்டப்படும் என்று குறிப்பிட்ட அவர் எம்.பிக்கள் தொகை 225 ஐ விட கூடாது எனவும் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் நம்பிக்கையில்லா பிரேரணைகளுக்கு முன்னர் 20 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் ஆராயப்பட்டு நிறைவேற்றப்படும் என்றும் குறிப்பிட்டார். இது தொடர்பில் சுதந்திரக் கட்சி எம்.பிக்கள் உடன்பாடு தெரிவித்துள்ள தாகவும் அவர் கூறினார்.