தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு க்குழு கூட்டம் இன்றுகாலை பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களது தலைமையில் நடைபெற்றது.
தமிழரசுக் கட்சியின் சார்பில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின்-ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், என். சிறீகாந்தா, ஹென்றி மகேந்திரன், கருணாகரன்-ஜனா ஆகியோரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி-ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஸ் பிறேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்-புளொட் சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன், ராகவன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இக்கூட்டத்தில் முக்கியமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களால் அண்மையில் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருக்கும் 20ஆவது தேர்தல் சீர்திருத்தம் சிறுபான்மையினருக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இரா. சும்பந்தன் அவர்கள் மிகத் தெளிவாக எடுத்துக் கூறினார். இதன்போது இந்த புதிய திட்டத்தை எதிர்க்க வேண்டுமென்று அனைத்துக் கட்சித் தலைவர்களும் மிகவும் வலியுறுத்திக் கூறினார்கள்.
அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளுக்கு எத்தனை எத்தனை ஆசனங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்பது பற்றியும் விரிவாக ஆராயப்பட்டது. இன்றுமாலை 6மணிக்கு தொடர்ச்சியாக இந்தக் கூட்டம் பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள புளொட் காரியாலயத்தில் நடைபெறுகின்றது.