தன்னுடைய சிலையைச் செய்ய எஸ். பி.பாலசுப்பிரமணியம் ஏற்கெனவே பணித்த விவரம் தற்போது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களில் ,ஆந்திராவை சேர்ந்த சிற்பி உடையார் ராஜ்குமார் என்பவரிடம் தன் சிலையை செய்ய ஜூன் மாதமே கொடுத்ததாகத் தெரிய வந்துள்ளது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில், கொத்தபேட்டையை சேர்ந்த சிற்பி உடையார் ராஜ்குமார் என்பவரிடம், மறைந்த தனது தந்தை சாமமூர்த்தி- தாய் சகுந்தலா ஆகியோரின் சிலைகளை செய்வதற்கு எஸ்.பி.பி கொடுத்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் உடையார் ராஜ்குமாரை தொடர்பு கொண்ட எஸ்.பி.பி தனது சிலை ஒன்றை செய்து கொடுக்கும்படி கூறியுள்ளார். கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக சிலை செய்வதற்கு நேரில் வந்து தர முடியாது என்று கூறியதுடன், தேவையான புகைப்படம் எடுக்க முடியாது எனக் கூறி தனது புகைப்படங்கள் சிலவற்றை அனுப்பி வைத்துள்ளார்.
சிற்பி ராஜ்குமார் சிலையை செய்து கொண்டிருந்த நேரத்தில்தான், எஸ்.பி.பி கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆஸ்பத்திரியில் இருந்து எஸ்.பி.பி திரும்பியதும் சிலையை ஒப்படைக்க சிற்பி உடையார் ராஜ்குமார் திட்டமிட்டுள்ளார். ஆனால், சிலையின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது முடிந்துள்ள நிலையில், எஸ். பி.பி இறுதிப் பயணம் நடைபெற்று விட்டது. இதனால் தன்னுடைய மரணத்தை முன்னதாகவே உணர்ந்து இருப்பாரோ என்ற ஐயம் உறவினர்களிடையே எழுந்துள்ளது. தனது வாழ்வில் அடுத்து என்ன நடக்கும் என உணர்ந்தவராக எஸ்.பி.பி இருந்தது அவரது மரணத்திலும் நிகழ்ந்துள்ளது என்பதுதான் பெரும் சோகம்.