இலண்டன் பேச்சுவார்த்தை பற்றி சம்பந்தன் தமிழர்களுக்கு விளக்க வேண்டும் : சுரேஷ் பிரேமச்சந்திரன்

0
114

suresh mpலண்டன் பேச்சுவார்த்தை தொடர்பில் சம்பந்தன் தெளிவான விளக்கமொன்றை தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டுமென சுரேஷ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழரசு கட்சியின் வெளிநாட்டு விவகாரங்களுக்கு பொறுப்பானவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் வெளிவிவகார அமைச்சர், வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் இணைந்து இங்கிலாந்தில் இரகசிய பேச்சுவார்த்தை ஒன்றை நடாத்திவருவது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகள் மற்றும் தேர்தல் நிலைமைகள் தொடர்பிலேயே வெளிநாட்டில் கூடி பேசுவதாக தமிழரசு கட்சியின் வெளிநாடு விவகாரங்களுக்கு பொறுப்பாக உள்ள சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மக்களின் பிரச்சினை தொடர்பில் பேசுவது என்றால் வடமாகாண முதலமைச்சர், அமைச்சர்கள், உறுப்பினர்கள் இருக்கின் றார்கள்.

அதேபோன்று கிழக்கு மாகாண முதல மைச்சர், அமைச்சர்கள், உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்.

அவர்களுடன் பேசுவதே சரியாக இருக்கும் ஆனால் அவர்களுக்கும் இந்த பேச்சுவார்த்தைக்கும் தொடர்பில்லை.

தேர்தல் தொடர்பாக பேசுவது என்றால் வெளிநாட்டில் போய் வெளிநாட்டவருடன் பேசவேண்டிய தேவை என்ன? தேர்தல் நடக்க போவது இலங்கையில் அது தொடர்பில் இலங்கையில் தான் பேச வேண்டும்.

எம்மை பொறுத்தவரை தமிழ் மக்களின் உடனடி தேவைகள் மற்றும் தேர்தல் நிலைமைகள் குறித்து வெளிநாட்டில் பேசுவது என்பது ஒரு ஏமாற்று வேலை. இதற்கு முன்சிங்கப்பூரில் ஒரு கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டமும் இரகசிய கூட்டம் அதனை தொடர்ந்து இங்கிலாந்தில் நடக்கும் இந்தக் கூட்டமும் இரகசிய கூட்டமாக உள்ளது.

சிங்கபூர் கூட்டம் தொடர்பில் கூட்டமைப்புக்கு தெரிவிக்கப்படவில்லை. அந்த கூட்டம் முடிந்த பின்னரும் ஒன்றும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் கூட்டமைப்பு சார்பாக லண்டன் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் சார்பில் எவரையும் எந்த பேச்சு வார்த்தைக்கும் அழைக்கவில்லை.

தமிழ் மக்களின் உடனடி பிரச்சினைகள் மற்றும் தேர்தல் நிலைமைகள் என்பது பட்டவர்த்தமான விடயம் அதில் இரகசியம் காக்க எதுவுமில்லை. அடுத்தது மூன்றாவதாக துபாயில் பேசபோவதாகவும் ஊடக வாயிலாக அறிகின்றோம்.

தற்போது இந்த இரகசியகூட்டம் தொடர்பில் ஊடகங்களில் பலவாறாக செய்திகள் வெளிவர தொடங்கி யுள்ளன.

எனவே இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என சுரேஷ்பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here