தமிழகத்திலிருந்து படகு மூலம் கடத்திவரப்பட்ட 150 கிலோ கஞ்சாவை வல்வெட்டித்துறைப் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு வல்வெட்டித்துறை பொலிகண்டி கடற்கரையோரத்தில் சந்தேகத்திற்கிடமாக தரித்து நின்ற படகு ஒன்றை சோதனையிட்ட போது அதில் கஞ்சாப் பொதிகள் மறைத்து வைத்திருந்தமை தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவற்றை மீட்ட பொலிஸார், அப்பகுதியில் நின்ற இளைஞர் ஒருவரையும் சந்கேத்தின் பேரில் கைது செய்தனர்.
குறித்த இளைஞர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்றும் இவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, கஞ்சாவைக் கொள்வனவு செய்வதற்காக வந்திருந்த நால்வர் பருத்தித்துறையில் காத்திருக்கின்றனர் என்ற தகவல் தெரிய வந்தது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து பருத்தித்துறை பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. பருத்தித் துறைப் பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பின்போது, திக்கம் பகுதியில் நால் வர் கைதுசெய்யப்பட்டனர்.
இவர்களில் மூவர் மாதகல் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் ஆனைக் கோட்டையைச் சேர்ந்தவர் என்றும் பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 8 லட்சம் ரூபாயுக்கு அதிகம் என்றும் மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருகின்றனர் என இரு பிரிவுப் பொலிஸாரும் தெரிவித்தனர்.