பாரிஸில் கொண்டாட்டங்களுக்குத் தடை: மார்செய் நகரில் உணவகங்கள் அடைப்பு!

0
169

தொற்றினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மார்செய் (Aix-Marseille) மற்றும் Guadeloupe பிரதேசங்கள் அதி உயர் எச்சரிக்கை வலயங்களாகப்'(“alerte maximale”) பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.இங்கு உணவகங்களும் (restaurants) அருந்தகங்களும்(Bars) முற்றாக மூடப்படுகின்றன.

பாரிஸ் உட்பட வேறு எட்டு பெரிய நகரங்களில் அருந்தகங்கள்(Bars) அனைத்தும் இரவு 10 மணிக்கு மூடப்படவேண்டும். கடற்கரைகள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் பத்துக்கு மேற்பட்டோர் ஒன்று கூடுவது தடுக்கப்படும்.(Bordeaux, Lyon, Nice, Lille, Toulouse, Saint-Etienne, Paris, Rouen, Grenoble, Montpellier)

தலைநகர் உட்பட நகரங்களில் பொதுக் கொண்டாட்டங்கள், மாணவர் ஒன்றுகூடல்கள் போன்ற நிகழ்வுகள் தடைசெய்யப்படுகின்றன. கொண்டாட்ட மண்டபங்கள் மற்றும் பொது மண்டபங்கள் (les salles des fêtes et polyvalentes) மூடப்படுகின்றன.

வரும் சனி, மற்றும் திங்கள் கிழமைகளில் இருந்து அமுலுக்கு வரும் இந்தக் கட்டுப்பாடுகள் முதற்கட்டமாக இரண்டு வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும்.

சுகாதார அமைச்சர் Olivier Véran இத்தகவல்களை இன்று அறிவித்திருக்கிறார்.

எலிஸே மாளிகையில் நடைபெற்ற பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களையே மாலையில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் சுகாதார அமைச்சர் வெளியிட்டார்.

செய்தியாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கையில், நாட்டைப் பகுதியாகவோ முற்றாகவே முடக்குவது பற்றிப் பரிசீக்கப்படவில்லை என்று அமைச்சர் தெரிவித்தார்.

“வைரஸ் நிலைமை உலகளாவிய ரீதியில் மோசமடைந்து செல்கிறது. நாம் விரைந்து நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் சில பிராந்தியங்கள் ஆபத்தான கட்டத்துக்குள் செல்லக்கூடும். ஆயினும் அதைத் தடுப்பதற்கு இன்னும் அவகாசம் இருக்கிறது. சமூக இடைவெளியை இறுக்கமாகப் பேணுவதுடன் உணவகங்களுக்கும் அருந்தகங்களுக்கும் கூட்டமாகச் செல்வதைத் தவிர்க்கவேண்டும்.

“அவசர பிரிவுகளில் அதிகரித்துவரும் அனுமதிகளால் இல் து பிரான்ஸ் பிராந்திய மருத்துவமனைகள் கடும் அழுத்தத்தைச் சந்திக்கத் தொடங்கி உள்ளன” – என்று சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நாடு முழுவதும் தொற்று நிலைவரத்தை வர்ணங்களால் அடையாளப்படுத்தும் புதிய வரைபடம் ஒன்றையும் சுகாதார அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது.

படம் :BFM தொலைக்காட்சி Screen capture.

23-09-2020
புதன்கிழமை.

குமாரதாஸன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here