உலகத் தமிழர் பேரவையின் பொய்ப்பிரச்சாரத்தை கடுமையாக கண்டிக்கின்றோம் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை (ICET )

0
521

icet logo - Kopieதென் ஆபிரிக்காவின் In Transformation Initiative (ITI) என்ற அரச சார்பற்ற அமைப்பால் லண்டனில் சிறிலங்கா அரசுடன் நடைபெறும் ரகசிய சந்திப்பு தொடர்பாக தீபம் தொலைகாட்சியில் நேர்காணல் வழங்கிய கலாநிதி ரமணன் (பஞ்சகுலசிங்கம் கந்தையா) அவர்களின் காணொளி , உலகத் தமிழர் பேரவையின் உத்தியோர்கபூர்வமான மின்னஞ்சல் வாயிலாக பல ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டிருந்தது.

அவ் மின்னஞ்சலில் கலாநிதி ரமணம் (பஞ்சகுலசிங்கம் கந்தையா) அவர்கள் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் பிரதிநிதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ் விடையம் மக்களை ஏமாற்றும் வகையில் உண்மைக்கு புறம்பாக எழுதப்பட்டுள்ளது . கலாநிதி ரமணம் (பஞ்சகுலசிங்கம் கந்தையா) அவர்கள் எமது அமைப்பின் பிரதிநிதி அல்ல என்பதையும் அத்தோடு எமது உறுப்பு நாடான நோர்வே ஈழத் தமிழரவை நிர்வாகத்தின் சார்பாகவும் அவர் இச் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை என்பதையும் நாம் உறுதிப்படுத்தி இத்துடன் தெரிவிக்கின்றோம்.

உலகத் தமிழர் பேரவையின் உருவாக்கத்தில் ஆரம்பத்தில் அங்கம் வகித்த பல நாடுகளின் மக்கள் அவைகள் அவ் அமைப்பின் நம்பகத்தன்மை ,மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாத காரணத்தாலும் , மக்களின் அரசியல் அபிலாசையை புறம்தள்ளி ஒற்றையாட்சியை நோக்கி பயணிக்கும் தனிநபர் அமைப்பாக மாற்றம் அடைந்ததால் இவ் அமைப்பில் இருந்து விலக முடிவெடுத்தனர் . அந்த வகையில் ஐரோப்பாவில் அனைத்து நாடுகளும் வெளியேறிய நிலையில் அண்மையில் நோர்வே ஈழத் தமிழரவை மற்றும் சுவீடன் தமிழர் பேரவையும் அத்தோடு மலேசியா தமிழர் அவையும் உலகத் தமிழர் பேரவையில் இருந்து விலகிக்கொண்டனர்.

அவ்வாறு அண்மையில் விலகிய அமைப்புகளை தொடர்ந்தும் தமது இணையதளத்தில் தமது உறுப்பு நாடுகளாக வைத்திருப்பது சர்வதேச சட்டங்களுக்கு முரணானது . குறிப்பிட்ட அமைப்புகளிடம் இருந்து பலதடவை தமது அமைப்புகளின் பதிவுகளை இணையத்தளத்தில் இருந்து நீக்குமாறு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டும் இன்றுவரை அதை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது அவர்களின் தான்தோன்றித்தனத்தையே காட்டுகின்றது.

அந்த வகையிலேயே அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை சுதந்திர தமிழீழத்தை நோக்கி வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையில் 2011 ஆண்டு 14 நாடுகளை பிரதிநித்துவப்படுத்தும் வகையில் உருவாக்கம் பெற்றது.

அத்தோடு சிறிலங்கா அரசுடன் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை எவ்வித சந்திப்பையும் மேற்கொள்ளவில்லை என்பதையும் நாம் இங்கு தெரிவிக்கின்றோம் . சிறிலங்கா அரசு தமது இணையத்தளத்தில் புலம்பெயர் அமைப்புகளுடன் சந்திப்பு செய்கின்றது என்பது தனிநபர் உறுப்பினர்களை கொண்ட உலகத் தமிழர் பேரவையோடு மட்டுமே . அத்தோடு இவ் தனிநபர் அமைப்புக்கு தலைவராக விளங்கும் வணக்கத்துக்குரிய பாதர் எமானுவேல் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறிலங்காவில் புதிய அரச தலைவர் மேற்கொள்ளும் நல்ல விடையங்களை தமிழர்கள் மதிக்க வேண்டும் , குற்றம் பிடிக்க கூடாது என்பது , தமிழின அழிப்பை மேற்கொள்பவர்களுக்கு தனது ஆசீர்வாதத்தை வழங்குவதாகவே கருதவேண்டும்.

தென் ஆபிரிக்காவின் In Transformation Initiative (ITI) என்ற அரச சார்பற்ற அமைப்பால் லண்டனில் சிறிலங்கா அரசுடன் நடைபெறும் ரகசிய சந்திப்புக்கு முன்னரும் இப்படியான ஒரு சந்திப்பு சுவிஸ் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் யேர்மனியில் இயங்கும் ஒரு அரச சார்பற்ற நிறுவனத்தின் (Berghof Foundation ) ஒருங்கிணைப்பில் அதிகார பரவலாக்கம் தொடர்பான தீர்வு திட்டத்துக்கு முயற்சி எடுக்கப்பட்டது . உலகத் தமிழர் பேரவையின் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இச் சதி முயற்சிக்கு அச் சந்திப்பில் கலந்துகொண்ட அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை , தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி , தமிழ் சிவில் சமூகம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் , ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து முற்றுப்புள்ளி வைத்தது . அதன் காரணமாகவே Berghof Foundation அமைப்பால் எடுக்கப்பட்ட நகர்வு உறங்குநிலைக்கு தள்ளப்பட்டு இன்று புதிய ஒரு வடிவத்தில் தேசியத்தில் உறுதியாக நிற்கும் அமைப்புகளை புறம்தள்ளி In Transformation Initiative (ITI) என்ற அமைப்பால் லண்டனில் சிறிலங்கா அரசுடன் சந்திப்பு நடைபெற்றது.

லண்டனில் In Transformation Initiative (ITI) என்ற அமைப்பால் நடைபெற்ற சந்திப்பு தொடர்பாக சுரேன் மற்றும் சுமந்திரன் அவர்கள் இன்று வெளியிட்ட கூட்டறிக்கையில் ” Srilankan Diaspora “என்று தம்மை அடையாளப்படுத்தி கொள்வது , அவர்கள் ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதையே தெளிவுபடுத்துகின்றது .

இவ்வாறாக மக்களை ஏமாற்றி தமிழ் மக்களின் அரசியல் வேணவாவை குழிதோண்டிப் புதைக்கும் செயலில் ஈடுபட்டு தமிழ் மக்களின் நியாமமான கோரிக்கைகளை பலவீனப் படுத்துவதற்கும் இனப்படுகொலையாளிகளை பாதுகாக்கும் முயற்சியில் நகரும் தனிநபர்களை கொண்ட உலகத் தமிழர் பேரவையை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here