பாரிஸ் நகர வீடு ஒன்றில் வைத்து மிக மோசமாகச் சித்திரவதை செய்து கொல்லப்பட்டிருப்பதாகக் கூறப்படும் ஆசிய நாட்டவர் ஒருவரது சடலத்தை பொலீஸார் மீட்டிருக்கின்றனர்.
நகரின் 19 ஆவது வட்டகையில் ஊர்க்(Ourcq) மற்றும் கிறீமி(Crimée) மெற்றோ ரயில் தரிப்பிடங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பிலேயே செவ்வாய்க்கிழமை மாலை சடலம் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டுள்ளது.
கொல்லப்பட்டவர் துளையிடும் கருவி(drill ) ஒன்றினால் மிக மோசமான முறையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அவர் எந்த நாட்டவர் என்பது உடனடியாக உறுதிப்படுத்தப்பட வில்லை.
அலறல் சத்தம் கேட்டதாக அயலவர் ஒருவர் வழங்கிய தகவலை அடுத்தே பொலீஸார் அங்கு விரைந்து சடலத்தைக் கண்டுபிடித்தனர்.
‘பரிஸியன்’ ஊடகம் வெளியிட்டிருக்கும் தகவலின்படி, ஆசிய நாடொன்றினைப் பூர்வீகமாகக் கொண்ட ஆண் ஒருவரே துளையிடும் கருவி ஒன்றினால் மிக மோசமாக சித்திரவதை செய்து கொல்லப்பட்டிருக்கிறார். தரையில் கிடந்த சடலத்தின் கால் பாதங்கள், தலை மண்டை உட்பட பல இடங்களில் துளைக்கப்பட்ட காயங்கள் காணப்படுகின்றன எனத் தெரிவிக்கப்படுகிறது. குற்ற விசாரணைப் பொலீஸார் அந்த வீட்டில் சோதனைகளை நடத்தி உள்ளனர்.
மர்மமான முறையில் நிகழ்ந்திருக்கும் இக் கொலைக்கான காரணம் தெரியவரவில்லை. கொல்லப்பட்டவர் வீட்டின் உரிமையாளரா அல்லது வாடகைக் குடியிருப்பாளரா என்பதும் உடனடியாக அறியவரவில்லை.
சம்பவம் நடந்த வீட்டில் மொபைல் தொலைபேசிகளை திருத்தும் பணிகள் இடம்பெற்றுவந்துள்ளமை தெரியவந்துள்ளது.
23-09-2020
புதன்கிழமை
குமாரதாஸன்