எங்கே என் தம்பி? இங்கே இருந்தானே இருந்தவனைக் காணவில்லை!

0
192

கவிஞர் புதுவை அவர்கள் அன்று தியாகி. லெப். கேணல் திலீபனின் நினைவாக எழுதிய கவிதையின் வரிகள்…
கூற்றுவனைத் தூக்கிலிடு
……………………………..
புதுவை இரத்தினதுரை
………………………………


எங்கே என் தம்பி?
எங்கே என் தம்பி?
இங்கே இருந்தானே, இருந்தவனைக் காணவில்லை
எங்கே என் தம்பி?
மெல்ல…மெல்ல
அந்த விளக்கணையும் வேளையிலே
எல்லோரும் சேர்ந்து ‘எண்ணையிடு’ என்றோமே
கல்லான நெஞ்சே….!
நீ கண்திறந்து பார்க்கவில்லை
நாவரண்டு நாவரண்டு,
நாதமணிப் பேச்சிழந்து
பூ சுருண்டமாதிரியாய் போய்முடிந்து விட்டானா?
காற்றே நீ மூசு,
கடலலையே பொங்கி எழு.
கூற்றுவனா?
அவனைக் கொண்டுவந்து தூக்கிலிடு
எங்கே என் தம்பி?
எங்கே என் தம்பி?
இங்கே இருந்தானே இருந்தவனைக் காணவில்லை
என் இனிய திலீபனே!
ஒரு வார்த்தை…
ஒரே ஒரு வார்த்தை மட்டும்…..
பேசிவிடு
“தமிழீழம்” என்ற தாரக மந்திரத்தைச்
சொல்லிவிட்டு;
மீண்டும் தூங்கி விடு
மக்கள் சமுத்திரத்தில்
மரணித்து விட்ட வீரனே!
ஒரு வார்த்தை;
ஒரே ஒரு வார்த்தை மட்டும்
பேசிவிட்டுத் தூங்கு……
என்னினிய தோழனே!
உனது மரணப்படுக்கை கூட
இங்கே மகத்துவம் மிக்கதாகி விட்டது
நீ கண்மூடியபடி தூங்குகின்றாய்
அந்தப் படுக்கை இங்கோர் பூகம்பத்தையே வரவழைக்கிறது
உன் சாவே இங்கோர் சரித்திரமாகிவிட்டது
செத்த பின்னர்!
ஊர்கூடித்
தேம்புவதுதான் இங்கு வழக்கம்.
ஆனால்….
ஊரே தேம்பிக் கொண்டிருந்தபோது
மரணித்த வரலாறு
உன்னுடன்தான் ஆரம்பமாகிறது
சாவு பலதடவை உன்னைச் சந்திக்கவந்து
தோல்வி கண்டது
இப்போது
சாவை நீயாகச் சந்திக்கச்சென்று
வெற்றிகண்டு விட்டாய்
என் இனிய திலீபனே!
நீ கையில் ஆயுதம் ஏந்தியபோதும்
உன்னை அருகிருந்து பார்த்துள்ளேன்.
நீ….நெஞ்சில் அகிம்சை ஏந்திய போதும்
அருகிலி பார்த்துள்ளேன்
எந்த வித்தியாசமும் தெரியவில்லை
போராளிகளுக்குரிய போர்க்குணமே உன்னில் தெரிந்தது
இந்திய அரசே!
இது உனக்குப் புரிகிறதா?
தம்பி திலீபன்…..உன்னிடம் என்னதான் கேட்டான்
எங்களை
சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கவிடு என்றான்.
எங்கள் மண்ணின்
இறைமையைத் தா என்றான்
இது குற்றமா?
இதற்காகத்தானே போராடினான்
இதற்காகத்தானே போராடினான்
இதற்கு என்ன பதில் தரப்போகின்றாய்……
உன் பதிலை
நேற்று வந்த விமானத்திலும் எதிர்பார்த்தோம்
தாமதித்துவிட்டாய்
நீ கடத்திய ஒவ்வொரு நொடிப் பொழுதும்
இங்கோர் புயலையே உருவாக்கிவிட்டாய்
திலீபன் என்ற புயல்
உன்னைச் சும்மா விடாது
உசுப்பியே தீரும்
எங்கே என் தம்பி?
எங்கே என் தம்பி?
இங்கே இருந்தானே!
இருந்தவனைக் காணவில்லை.
என்இனிய திலீபனே!
நிம்மதியாய்த் தூங்கு
நிலம் வெடிக்கப் போகிறது
நிம்மதியாய்த் தூங்கு
நிலம் வெடிக்கப்போகிறது.
காற்றே நீ முக
கடலலையே பொங்கி எழு
கூற்றுவனா?
அவனைக் கொண்டுவந்து தூக்கிவிடு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here