வைரஸ் பரிசோதனை செய்வதற்காக மக்கள் முண்டியடிப்பதால் பாரிஸ் நகரில் பரிசோதனைக்கூடங்களின் முன்பாக நீண்ட வரிசைகளைக் காணமுடிகிறது.
பலரும் சோதனை நிலையங்களுக்கு வெளியே அதிகாலைமுதல் வந்து பல மணிநேரங்கள் காத்து நிற்கின்றனர். வரிசைகளில் சமூக இடைவெளி பேணவேண்டிய இருப்பதால் கியூக்கள் மிக நீண்டு செல்கின்றன.
பரிசோதனை முடிந்து பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்வதற்கும் பல நாள் கணக்கில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தனியார் ஆய்வு கூடங்கள் சில கட்டணத்தை உயர்த்தி உள்ளன. துரித கதியில் சோதனை முடிவுகளைப் பெற்றுக் கொள்ளவிரும்புவோரிடம் 100 ஈரோக்கள் வரை கட்டணம் அறவிடப்படுகின்றது எனத் தகவல் வெளியாகி உள்ளது.
தன்னிச்சையான இந்தக் கட்டண அதிகரிப்பு சட்டவிரோதமானது என்று சுகாதார அமைச்சர் Olivier Véran எச்சரித்திருக்கிறார். நாட்டில் கொவிட் 19 வைரஸூக்கான பி. சி. ஆர். எனப்படும் சாதாரண பரிசோதனைக்கான செலவு முழுவதுமாக அரச சுகாதார காப்புறுதி நிறுவனத்தால் (l’Assurance maladie) மீளளிக்கப்பட்டு வருகிறது என்றும் மாறாக உயர்ந்த கட்டணங்களைச் செலுத்துவோருக்கு அத்தொகை மீளளிக்கப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
அவசியம் ஏற்பட்டால் சட்டவிரோதமான இத்தகைய கட்டண அறவீட்டை அரசு தலையிட்டுத் தடுக்கும் என்று சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை வயோதிபர்கள், மருத்துவர்களது சிபாரிசுடன் வருவோர் மற்றும் நோய் அறிகுறிகள் உள்ளோர் போன்றவர்களுக்கு பரிசோதனையில் முன்னுரிமை வழங்குமாறு ஆய்வு கூடங்களுக்கு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருக்கிறது.
பிரான்ஸில் வைரஸ் பரிசோதனை செய்வோர் எண்ணிக்கை வாரம் ஒன்றுக்கு பத்து லட்சம் என்ற எண்ணிக்கையில் உயர்ந்துள்ளது.
09-09-2020
வெள்ளிக்கிழமை.
குமாரதாஸன்