குரல் எடுத்ததோர் குயில் படுத்தது
குமுறி நின்றதோர் புயல் படுத்தது
தரமறுத்திடும் உரிமை பெற்றிட
தன் வயிற்றிலே போர் தொடுத்தது.
உரம் எழுந்தினி தடை உடைக்குமாம்
உயிர் பிரியமுன் இது நடக்குமா!
வர மறுப்பவர் வருகை கூடுமா!
வலை விதித்தவர் படைகள் ஓடுமா!
நெஞ்சில் ஆடிடும் கனவு மாழுமா
நினைவிழந்திடும் பிஞ்சு வீழுமா
அஞ்சி வாழ்ந்தவர் அரசில் ஏறவா
அனலில் ஆடிய வேங்கை சாகவா
நஞ்சு திண்டிட அஞ்சிடாதவன்
நல்லை வீதியில் பாடை ஏறவா
இங்கு ஓர் மலர் வாடுகின்றதே
இதய நாடிகள் ஒடுங்குகின்றதே
தங்க மேனியை சாவு தின்னுதே
தனலில் ஆடிய மேனி சோருதே
பொங்கி நின்றவன் பேச்சடங்குதே
பொழுதுசாயுதே! பொழுதுசாயுதே!
வந்து பாரடா! வந்து பாரடா!
வாடமுன்னொரு செய்தி கூறடா!