பிரான்சில் பள்ளிகள், பல்கலைக் கழகங்களில் வைரஸ் தொற்றுக்கள் அதிகரிப்பு!

0
399

புதிய கல்வியாண்டு ஆரம்பமாகி இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையில் பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்கள் போன்ற உயர்கல்வி நிலையங்களிலும் மாணவர்கள் மத்தியில் வைரஸ் தொற்றுக் குழுக்கள் (Clusters) அதிகரித்து வருகின்றன.

கடந்த சில தினங்களில் ஒரு டசினுக்கும் மேற்பட்ட உயர் கல்வி நிறுவனங்களில் மாணவரிடையே தொற்றுக்கள் வேகமாக அதிகரித்துள்ளன.

கல்வி நிறுவனங்களில் மாணவர் மத்தியில் சமூக இடைவெளி பேணுவதில் ஏற்பட்ட தளர்வினாலேயே தொற்றுக்கள் அதிகரித்துள்ளன என்று உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

விரிவுரைகளின்போது மாஸ்க் அணிந்திருப்பதையும் இடைவெளி பேணுவதையும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறு மாணவர்கள் கேட்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் தெற்கே மொம்பியே மருத்துவப் பல்கலைக்கழகத்தில் (University of Medicine of Montpellier ) சுமார் 60 மருத்துவ மாணவர்கள் தொற்றுக்குள்ளாகி யிருக்கின்றனர்.

சுமார் 50 மாணவர்களுக்கு வைரஸ் பீடித்ததை அடுத்து ஸ்ரார்ஸ்பூவில் (Strasbourg) உள்ள பொறியியல் கல்லூரி ஒன்று மூடப்பட்டுள்ளது.

பிரபல சயன்ஸ் போ (SCIENCES PO) பல்கலைக்கழகத்தின் Reims இல் அமைந்துள்ள வளாகத்தில்,24 மாணவர்கள் தொற்றுக்கு இலக்காகி யுள்ளனர். இங்கு மொத்தம் ஆயிரத்து 200 மாணவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.வளாகம் மூடப்பட்டு தொலைக்கல்வி முறையில் விரிவுரைகள் நடத்தப்படுகின்றன.

வில்தனுஸில் (Villetaneuse) அமைந்துள்ள சொர்போன் பல்கலைக்கழகத்தின் பாரிஸ் வடக்கு வளாகத்திலும் (Sorbonne Paris-Nord University) சில மாணவர்களுக்கு வைரஸ் தொற்றியமை தெரியவந்துள்ளது. எனினும் அந்த வளாகம் தொடர்ந்து செயற்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் வைரஸ் பரவல் காணப்படும் 13 பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவை வருமாறு:

Sciences Po Reims, the École des mines de Nancy, the École centrale in Lyon, the ICAM in Toulouse, the University of Nantes in 2nd and 3rd year of medicine, Sciences Po Lille, Catholic University of Lille, IAE of Marseille, University of Amiens, University of Rennes I, University of Nice, Poitiers மற்றும் Bordeaux.

பாடசாலைகளின்
நிலைவரம்

நாடு முழுவதும் தொற்றுக் காரணமாக 81 பாடசாலைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. அதேவேளை இரண்டாயிரத்து 100 வகுப்பறைகள் தனித்தனியே மூடப்பட்டுள்ளன என்று தேசிய கல்வி அமைச்சர் Jean -Michel Blanquer ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்திருக்கிறார். மாணவர்கள் மத்தியில் இதுவரை ஆயிரத்து 200 பேர் தொற்றுக்குள்ளாகி இருக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

16-09-2020
புதன்கிழமை.

குமாரதாஸன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here