பிரான்சு ஆர்ஜொந்தைப் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவாலயப் பகுதியில் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று (15.09.2020) செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணி முதல் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமாகி இன்று 16.09.2020 புதன்கிழமை இரண்டாவதுநாள் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
நேற்றையதினம் ஈகைச்சுடரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் பொறுப்பாளர் திரு.நிதர்சன் அவர்கள் ஏற்றிவைக்க ஆர்ஜொந்தைத் தமிழ்ச் சங்கத்தலைவர் திரு.விமலராஜா அவர்கள் மலர்வணக்கம் செலுத்தினார். அகவணக்கத்தைத் தொடர்ந்து, மாவீரர் பணிமனை துணைப் பொறுப்பாளர் திரு.பாக்கியநாதன் அவர்களும், ஆர்ஜொந்தை தமிழ்ச்சோலைப் பள்ளியின் முன்னாள் நிர்வாகி திருமதி ராணி அவர்களும், நியூலிசுமார்ன் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.தங்கத்துரை அவர்களும் பொதுமக்களும் சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து நினைவுரைகளும் இடம்பெற்றன.
நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் தமக்குரிய மாவீரர் நாள் 2020 இற்கான பங்களிப்பு அட்டைகளையும் தியாக தீபத்தின் முன்றலில் பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
இன்று புதன்கிழமை இடம்பெற்ற இரண்டாம் நாள் நிகழ்வில் ஈகைச்சுடரினை மாவீரர் பணிமனையின் துணைப்பொறுப்பாளர் திரு.பாக்கியநாதன் அவர்கள் ஏற்றிவைக்க மலர்வணக்கத்தை ஆர்ஜொந்தை தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.விமலராஜா அவர்கள் செய்திருந்தார். அகவணக்கத்தைத் தொடர்ந்து பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் திரு. மகேஸ் அவர்களும் கலந்துகொண்டு சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.
தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடர்ஏற்றி மலர்வணக்கம் செலுத்தியிருந்தனர்.
தொடர்ந்து 26.09.2020 சனிக்கிழமை வரை குறித்த நினைவேந்தல் நிகழ்வுகள் காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளன.
எதிர்வரும் 19.09.2020 சனிக்கிழமை மற்றும் 26.09.2020 சனிக்கிழமை காலை 9.00 மணிமுதல் மாலை 19.30 வரை பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் ஆர்ஜொந்தை தியாகதீபம் திலீபன் நினைவுத்தூபி முன்பாக 12 மணிநேரம் குறித்த அடையாள உண்ணா விரதம் இடம்பெறவுள்ளது.
குறித்த இருநாள் உண்ணாவிரத நிகழ்வில் பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினருடன் ஆர்ஜொந்தை, கொலம், சேர்ஜி, கிளிச்சி, செவ்றோன், ஸ்ரார்ஸ்பேர்க், செல் ஆகிய பகுதிகளின் இளையோர் அமைப்பினரும் இணைந்துகொள்ளவுள்ளனர்.
இதேவேளை தியாக தீபம் திலீபனின் இறுதி வணக்க நிகழ்வும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் கேணல் சங்கர் அவர்களின் 19வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் 26.09.2020 (சனிக்கிழமை) பிற்பகல் 14.00மணிக்கு குறித்த பகுதியில் இடம்பெறவுள்ளது.
அனைவரையும் இந்நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
குறிப்பு:-இம்முறை கோவிட் 19 நுண்கிருமித் தொற்றுக் காரணமாக அஞ்சலி செலுத்த வரும் அனைத்து உறவுகளும் முகக்கவசம் அணிந்து வரும்படி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
(தமிழர் ஒருங்கிணைப்பு குழு-பிரான்சு – ஊடகப்பிரிவு)
Home
சிறப்பு செய்திகள் பிரான்சில் உணர்வெழுச்சியோடு ஆரம்பமான தியாக தீபம் திலீபனின் 33 ஆவது நினைவேந்தல்!