தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்த நீதிமன்றம் தடை!

0
289

நல்லூரில் ஏற்பாடு செய்யப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு யாழ்.நீதிவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று (14) திங்கட்கிழமை காலை நடந்த வழக்கு விசாரணையின் போதே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாளை ஆரம்பமாகவிக்கும் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோரி யாழ்ப்பாணம் பொலிஸாரினால் யாழ்.நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கின் பிரதிவாதிகளாக 20 பேருடைய பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

இவ்வழக்கு இன்று நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நானும், சக சட்டத்தரணி சுகாசும் மன்றில் முன்னிலையாகியிருந்தோம்.

பொலிஸாரினால் மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை நிராகரித்து, திலீபனின் நினைவேந்தலை நடத்த அனுமதி தர வேண்டும் என்று சமர்ப்பணத்தை நாங்கள் மன்றில் செய்திருந்தோம்.

தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகளை நினைவுகூருகின்றோம், புலிகளை புத்துருவாக்கம் செய்ய முயற்சிக்கின்றோம், கொரோனா காலத்தில் இவ்வாறான நிகழ்வுகள் நடாத்த அனுமதிக்க கூடாது என்ற சில காரணங்களை பொலிஸர் சமர்ப்பணமாக முன்வைத்தார்கள்.

அந்த விடயங்களை நாங்கள் மறுத்திருந்தோம். மேலும் கடந்த காலங்களிலும் இவ்வாறான தடையுத்தரவு கோரப்பட்ட போது, நிகழ்வினை சுமூகமாக நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

இது மட்டுமல்லாமல் அமைச்சரவை ஒப்புதலுடன் திலீபனின் நினைவுதூபி புணரமைப்புக்கு நிதி ஒதுக்கப்பட்டது என்பதையும் மன்றில் சுட்டிக்காட்டியிருந்தோம்.

இருந்த போதும் எமது சமர்ப்பணங்கள் நிராகரிக்கப்பட்டு, பொலிஸாரினாலே கோரப்பட்டவாறு நினைவேந்தல் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடையுத்தரவு தொடர்பில் மேன்முறையீடு செய்யப்படும்” – எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தடையுத்தரவையடுத்து நல்லூரில் தியாக தீபம் திலீபன் நினைவாலயத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here