நீட் தேர்வு – பொதுவாக்கெடுப்பு நடத்தத் தயாரா?
மத்திய அரசுக்கு … தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் அறைகூவல்!
நீட் தேர்வு அச்சத்தில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதாகத் தொடர்ந்து வரும் செய்திகள் தமிழக மக்களைத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. அரசு நடத்தும் மேநிலைப் பள்ளி இறுதித் தேர்வில் வெற்றிப் பெற்ற மாணவர்கள் குறிப்பிடப்பட்ட சதவிகித மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே, மருத்துவம், பொறியியல் மற்றும் மேல் படிப்புகளுக்கு உரியவர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆனால், அதற்கு மேலாக நீட் தேர்வு என்னும் வேண்டாத வடிகட்டும் முறையை இந்திய அரசு திணித்துள்ளது. இதற்கு எதிராகத் தமிழக அரசும், அனைத்துக் கட்சிகளும், பல்வேறு கல்வியாளர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தப் பிறகும், மத்திய அரசு தனது பிடிவாதத்தை கைவிட மறுக்கிறது.
தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் நடத்தப்படுகின்றன. இக்கல்லூரிகளில் ஒடுக்கப்பட்ட, பிற்பட்ட மற்றும் ஏழை, எளிய மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் படித்து மருத்துவர்களாகித் தமிழ்நாட்டு மக்களுக்குத் தொண்டாற்றுகிறார்கள். இதற்கு நீட் தேர்வு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இத்தேர்வின் மூலம் வெற்றிபெறும் மாணவர்கள் அகில இந்திய அளவில் தரவரிசைப் படுத்தப்படுகிறார்கள். இதன்மூலம் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய இடங்கள் பறித்தெடுக்கப்படுகின்றன. இதன் விளைவாகத் தமிழகத்தில் படித்து மருத்துவப் பட்டம் பெறும் பிற மாநில மாணவர்கள் தங்களின் மாநிலங்களுக்குத் திரும்பி மருத்துவத் தொண்டு ஆற்றுவார்களே தவிர, தமிழ்நாட்டு மக்களுக்குத் தொண்டாற்ற வரமாட்டார்கள். இந்நிலைத் தொடர்ந்தால் எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் போதுமான மருத்துவர்கள் இல்லை என்ற நிலை உருவாகிவிடும்.
இத்தகைய அநீதியான நீட் தேர்வு முறைக்கு எதிராக கடமையுணர்வுடனும், தமிழன் என்ற பொறுப்புணர்வுடனும் குரல் கொடுத்த நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக மிரட்டப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
நீட் தேர்வு வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்துத் தமிழ்நாட்டு மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தத் தயாரா? என மத்திய அரசுக்கு அறைகூவல் விடுக்கிறேன்.