ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் காரணமாக வரும் ஒக்ரோபர், நவம்பர் மாதங்களில் அதிக உயிரிழப்புகள் நேரலாம் என்று உலக சுகாதார நிறுவனம் அச்சம் வெளியிட்டிருக்கிறது.
இவ்விரு மாதங்களும் வைரஸ் தொற்றுக்கு முகம் கொடுக்கும் மிகக் கடுமையான காலப்பகுதியாக இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஜரோப்பியக் கிளையின் பணிப்பாளர் Hans Kluge ஏ. எப். பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார்.
“ஒக்ரோபர், நவம்பர் மாதங்கள் கடுமையான காலமாக இருக்கும். அதிக உயிரிழப்புகளை நாங்கள் காண நேரிடலாம்” என்று அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் எச்சரிக்கை செய்துள்ளார்.
“இவ்வாறான மோசமான செய்திகளை
கேட்க விரும்பாத நிலையில் நாடுகள் இருக்கலாம். அதனை நான் புரிந்து கொள்கிறேன். அதேவேளை ஒரிடத்தில் அல்லது பல இடங்களில் வைரஸ் தொற்று விரைவிலே நின்றுவிடும் என்ற சாதகமான செய்தியையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்” என்றும் Hans Kluge தெரிவித்திருக்கிறார்.
டெனிஸ் தலைநகர் கொப்பன்ஹேகனை தளமாகக் கொண்டு செயற்படும் உலக சுகாதார நிறுவன உயர் அதிகாரியான மருத்துவ நிபுணர் Hans Kluge, வைரஸ் தடுப்பு மருந்து மீதான அபார நம்பிக்கைகள் குறித்தும் அந்த செவ்வியில் எச்சரிக்கை செய்திருக்கிறார்.
” தடுப்பு மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டவுடன் வைரஸ் தொற்று நின்றுவிடும் என்று பலரும் கூறுவதைக் கேட்கின்றோம். அது நிச்சயம் அல்ல. அவ்வாறு நம்புபவர்களை எச்சரிக்கிறேன். தற்சமயம் பரிசோதனையில் இருக்கும் தடுப்பு மருந்துகள் உலகின் எல்லா பகுதி மக்களுக்கும் பயனளிக்கக் கூடியனவா என்பது இப்போதுவரை உறுதிசெய்யப்படவில்லை. “
” இதுவரையான சில ஆய்வு முடிவுகள் சிலருக்குப் பயனளிக்கும் மருந்தொன்று பிறிதொருவருக்கு செயற்பாட்டு திறன் அற்றதாக இருப்பதைக் காட்டி உள்ளன.
“உண்மையில் இந்த வைரஸ் தொற்றின் முடிவு என்பது நாம் கட்டுப்பாடுகளைப் பேணி எவ்வளவுக்கு அதனோடு வாழக் கற்றுக்கொள்கின்றோமோ அத்தனைப் பொறுத்துத்தான் அமையும்” – என்றும் Hans Kluge தெளிவுபடத் தெரிவித்திருக்கிறார்.
பிரான்ஸ் உட்பட பல ஜரோப்பிய நாடுகளில் நாளாந்தம் பல்லாயிரக்கணக்கானோர் தொற்றுக்கு இலக்காகி வருகின்ற அபாய சூழ்நிலையிலும் மக்களைப் பெரும் பதற்றத்துக்கு உள்ளாக்காமல் தடுப்பு நடவடிக்கைகளை மெதுவாக முன்னெடுக்க அரசுகள் முயற்சித்து வருகின்றன. இந்த நிலையிலேயே ஐ. நா. அதிகாரியின் சற்றுப் பதற்றமான இந்த எச்சரிக்கைச் செய்தி வெளியாகி உள்ளது.
இதேவேளை-
ஜரோப்பாவில் தொற்று நிலைவரம் குறித்து ஆராயவும் ஐந்தாண்டு கூட்டுத் திட்டம் ஒன்றை வகுப்பதற்காகவும் உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பியக் கிளை அதன் சுமார் 50 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளை இன்றும் நாளையும் (திங்கள், செவ்வாய்) மாநாடு ஒன்றுக்கு அழைத்திருக்கிறது.
படம் : சுகாதார நிறுவனத்தின் ஜரோப்பிய பணிப்பாளர் Hans Kluge.
14-09-2020
திங்கட்கிழமை.
குமாரதாஸன்