பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு விடுக்கும் மாவீரர் நாள் 2020 தொடர்பான அறிவித்தல்!

0
497

எமது தேசத்தின் விடுதலைக்காக தம்முயிர்களை ஆகுதியாக்கிய எம் தேச மாவீரர்கள் என்றென்றும் தமிழர் நெஞ்சங்களில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். ஆண்டுதோறும் நவம்பர் 27 இல் மாவீரர் பெற்றோர்கள், உறவினர்கள் ஊர்கூடி நெய்விளக்கேற்றி மலர்கொண்டு வணக்கம் செலுத்திவருகின்றோம்.


அன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்களே!
இன்று உலகெங்கும் ஏற்பட்டிருக்கும் கோவிட் 19 என்னும் கொடிய வைரசினால் துன்பத்திற்கு உள்ளாகிவருகின்ற நிலையில், இந்தக் கொடிய வைரசில் எம்மைப் பாதுகாத்து நாட்டின் சட்டதிட்டங்களுக்கு மதிப்பளித்து மாவீரர் நாள் 2020 நினைவேந்தல் இம்முறை நடாத்தப்படவுள்ளது. வழமைபோன்று குறித்த நிகழ்வுகள் மக்களின் பங்களிப்பின் மூலமே நடாத்தப்படவுள்ளன. அதற்கான மாவீரர் பங்களிப்பு அட்டைகளை கட்டமைப்புப் பொறுப்பாளர்கள் பெற்றுக்கொள்ளும் நிகழ்வு இன்று (12.09.2020) சனிக்கிழமை காலை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஈகைச்சுடரினை மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவரும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுப் பொறுப்பாளருமான திரு.மகேஸ் அவர்களும் மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவரும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுச் செயற்பாட்டாளருமான திரு.சுரேஸ் அவர்களும் ஏற்றிவைத்தனர்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து மாவீரர் பங்களிப்பு அட்டையை முதலில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகப்பொறுப்பாளர் திரு.பாலசுந்தரம் அவர்களிடம் இருந்து தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகப் பொறுப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து ஏனைய கட்டமைப்புப் பொறுப்பாளர்கள் பங்களிப்பு அட்டையைப் பெற்றுக்கொண்டனர்.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுப் பொறுப்பாளர் திரு.மகேஸ், பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா ஆகியோர் மாவீரர் பங்களிப்பு அட்டை மற்றும் மாவீரர் நாள் தொடர்பில் கருத்துரைத்தனர்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு -ஊடகப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here