லெபனானின் பெய்ரூட் துறைமுகத்தில் வாகன ஒயில், ரயர்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் சேமிக்கப்பட்டிருந்த களஞ்சியம் ஒன்றில் பெரும் தீ பற்றியுள்ளதாக செய்திகள் வருகின்றன.
நகரை நிர்மூலமாக்கிய பெரும் வெடிப்புகள் நிகழ்ந்து ஒருமாதத்துக்கும் சற்று அதிக காலப்பகுதிக்குள் அதே துறைமுகப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் இந்தத் தீ அனர்த்தம் நகரவாசிகளை மீண்டும் கிலி கொள்ள வைத்திருக்கிறது.
துறைமுகப்பகுதியில் இருந்து பெரும் கரும்புகை மண்டலம் மேலெழும் காட்சிகளை பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
துறைமுகத்தின் சுதந்திர வர்த்தக வலயப்பகுதியில் உள்ள களஞ்சியம் ஒன்றிலேயே தீ பரவியுள்ளது என்பதை இராணுவம் உறுதி செய்துள்ளது. தீயை அணைக்கும் முயற்சியில் ஹெலிக்கொப்ரர்கள் ஈடுபட்டிருப்பதை அரசுத் தொலைக்காட்சி ஒளிபரப்பி உள்ளது.
நிலைமையை அவதானித்து வருவதாகத் தெரிவித்திருக்கும் பிரான்ஸின் அதிபர் மாளிகை வட்டாரங்கள் தேவையேற்பட்டால் தீயணைப்பு உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளன.
இந்தத் தீயினால் பொது மக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை என்று லெபனான் செஞ்சிலுவைச்சங்கப் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் மக்களை அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
பெய்ரூட் துறைமுகப்பகுதியில் கடந்த மாதம் 4ஆம் திகதி பெருந்தொகையில் அமோனியம் நைத்ரேட் இரசாயனம் சேமிக்கப்பட்டிருந்த களஞ்சியங்கள் வெடித்துச் சிதறியதில் நகரின் பெரும்பகுதி அழிவுண்டமை தெரிந்ததே. இந்த அனர்த்தத்தில் 192 பேர் உயிரிழந்தனர். ஆறாயிரத்து 500 பேர்வரை காயமடைந்தனர்.
10-09-2020
வியாழக்கிழமை
குமாரதாஸன்