09.09.1990 அன்று மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட சத்துருக்கொண்டான் பாய்ஸ் டவுன் படைமுகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் சத்துருக்கொண்டான், பனிச்சையடி, கொக்குவில் மற்றும் பிள்ளையாரடி போன்ற கிராமங்களை சுற்றிவழைத்து அங்கிருந்த 186 அப்பாவித் தமிழ் மக்களை விசாரணைக்கென அழைத்துச் சென்றார்கள்.
இவர்களில் பெண்கள் குழந்தைகள் கற்பிணி பெண்கள், சிசுக்கள் முதியவர்கள் மற்றும் இளைஞர்களும் அடங்கியிருந்தனர்.
இவர்கள் அனைவரும் சத்துருக்கொண்டான் பாய்ஸ் இராணுவமுகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டதாக அப்பிரதேச மக்கள் கூறுகின்றனர். இதில் ஒருவர் மாத்திரம் பலத்த காயங்களுடன் உயிர்தப்பி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார்.
இராணுவத்தினரால் அழைத்துச் செல்லபட்டு சிறிது நேரத்தில் அழுகுரல்கள் மற்றும் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதாகவும் பின்பு அப்பிரதேசத்தில் புகைமண்டலம் தெரிந்ததுடன் பின்னர் பிணவாடை வீசியதாக வீடுகளின் மறைந்திருந்து உயிர்தப்பியவர்கள் தெரிவித்தனர்.