நெருக்கடிகாலத்தில் பணியாற்றிய வெளி நாட்டுப் பிரஜைகள் குடியுரிமை பெற விரும்பி விண்ணப்பித்திருந்தால் அந்த விண்ணப்பங்களை துரிதமாகப் பரிசீலித்து அவர்களுக்குப் பிரெஞ்சுக் குடியுரிமை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
குடியுரிமைகளுக்குப் பொறுப்பான அமைச்சர் மலேன் ஷியப் (Marlène Schiapp) இத்தகவலை வெளியிட்டிருக்கிறார்.
நாடு எதிர்கொண்ட பெரும் சுகாதார நெருக்கடியை அடுத்து அமுல்செய்யப்பட்ட பொது முடக்க காலப்பகுதியில் முன்னரங்கத்தில் நின்று பணியாற்றிய வெளிநாட்டு மருத்துவர்கள், தாதியர், அவசர சேவையாளர்கள், காசாளர்கள், கழிவு அகற்றுவோர், துப்புரவுப்பணியாளர்கள் போன்றவர்களது குடியுரிமை விண்ணப்பங்களையே துரிதகதியில் விசாரணைக்கு எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
“பிரெஞ்சு குடியுரிமை பெறுவது என்பது வெறுமனே நிர்வாக ரீதியான செயற்பாடு மட்டுமல்ல அது ஒர் உயர்ந்த மதிப்புக்குரிய குறியீட்டைக் கொண்ட புனிதமான காரியம்” என்று அவர் பத்திரிகைப் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார்.
07-09-2020
திங்கள்கிழமை
குமாரதாஸன்