சங்கமன்கந்தை கடற்பரப்பில் இருந்து 38 மைல் தொலைவில் எரிபொருள் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட போதிலும் கிழக்கு மாகாண அம்பாறை மாவட்ட மீனவர்கள் எவரும் மீன்பிடிப்பதற்கு கடலுக்கு செல்லவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனாமா அரசுக்கு சொந்தமான “MT NEW DIAMOND“ என்ற கப்பல் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இவ்வாறு தீ விபத்துக்குள்ளாகிய நிலையில் கடும் சிரமங்களுக்கு மத்தியில் குறித்த கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இத்தீ விபத்தினால் கடலில் கச்சா எண்ணெய் கசிவு ஏற்படாது என பல்வேறு தரப்பினரும் அறிவித்துள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்தின் பாண்டிருப்பு, கல்முனை உள்ளிட்ட பகுதிகளில் என்ணெய் பரவல் அடையாளங்கள் தென்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
தீ விபத்திற்கு இலக்கான கப்பலில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் இந்த எண்ணெய் பரவல் அடையாளங்கள் ஏற்பட்டுள்ளனவா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற சரியான தகவல்கள் கிடைக்கவில்லை.
எண்ணெய் பரவலின் எச்சங்கள் கடற்கரையோரங்களில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் தாவரங்களில் தென்படுவதை காண முடிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.