பிரான்ஸின் கிராமப்புறங்களில் குதிரைகள் மர்மமான முறையில் கொல்லப்படும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த மாதத்தில் மட்டும் 15 குதிரைகள் இரவு நேரங்களில் குத்தியும் வெட்டியும் உடல் அவயங்கள் அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடக்கக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குட்டிகள் உட்பட பல குதிரைகள் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளன.
கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டும் காணப்படுகின்ற குதிரைகளில் அவற்றின் வலது காதுகள் அறுக்கப்பட்டிருப்பது பொதுவாக அவதானிக்கப்பட்டுள்ளது. கன்னங்கள், தசைப்பகுதிகளில் குத்துக் காயங்கள் தென்படுகின்றன. சில குதிரைகளின் கண்கள், பிறப்பு உறுப்புகள் அகற்றப்பட்டுள்ளன என்று பலரும் முறையிடுகின்றனர்.
இனந்தெரியாத நபர்களால் இரவு நேரங்களில் நடத்தப்படுகின்ற இந்தக் கொடூரச் செயல்களால் குதிரை வளர்ப்பவர்கள் மத்தியில் பெரும் அச்சமும் கவலையும் அதிகரித்துள்ளது.
மிருகங்கள் மீதான இந்தச் சித்திரவதைக்குக் காரணமான எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. நாட்டின் விவசாய அமைச்சும் நீதி அமைச்சும் இத்தகைய முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளைத் தீவிரப்படுத்தி உள்ளன.
குதிரைகள் பராமரிக்கப்படும் பட்டிகளிலும் வயல்புறங்களிலும் கண்காணிப்பு நடைமுறைகள் பல அறிவிக்கப்பட்டுள்ளன.
இவை மனநலம் பாதிக்கப்பட்ட தனிநபர் செயலா அல்லது பலர் குழுவாகச் சேர்ந்து இயங்கி திட்டமிட்டு குதிரைகள் மீது புரியும் வன்முறையா என்பது தெளிவாகவில்லை என்று பொலீஸ் விசாரணையாளர்கள் கூறுகின்றனர்.
குதிரைகளின் உடற்பாகங்கள் அறுக்கப்பட்டிருக்கும் நேர்த்தியான விதத்தை நோக்கும் போது குதிரைகளைக் கட்டுப்படுத்தும் திறன், கைதேர்ந்த சத்திர சிகிச்சை அனுபவம் அல்லது கொல்களப் பணிகளில் பரீட்சையமானவர்கள்தான் இதன் பின்னணியில் இருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுப்பப்படுகிறது.
இவ்வாறான மிருக வன்முறைகள், மதம் சார்ந்த மூட நம்பிக்கைகள், குறுங்குழுவாத செயல், சாத்தானின் சடங்குகள், விலங்குகள் மீதான பாலியல் சீண்டல் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றுடன் தொடர்பு பட்டவையாக இருக்கக் கூடும் என்று நாட்டின் மத்திய புலனாய்வு சேவையினர் (Central Territorial Intelligence Service) கருதுகின்றனர் என்று செய்தி வெளியாகி உள்ளது.
29-08-2020
சனிக்கிழமை.
குமாரதாஸன்