பொது முடக்கம் ஒன்றை- குறிப்பாக நாடளாவிய முடக்க நிலை ஒன்றை- தவிர்ப்பதற்காக இயலுமான அனைத்து வழிகளிலும் முயற்சித்து வருகின்றோம். ஆயினும் எந்தவொரு சூழ்நிலையையும் நிராகரிப்பது ஆபத்தானது என்று அதிபர் மக்ரோன் கூறியிருக்கிறார்.
பிரான்ஸில் ஒரு நாளில் மிக அதிக எண்ணிக்கையாக ஏழாயிரம் பேர் புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ள நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
இன்றைய தினம் சுமார் 70 க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கலந்து கொண்ட மாநாட்டில் நாட்டின் தற்போதைய சுகாதார நெருக்கடி, பொருளாதார அனர்த்த நிலைமை,மற்றும் உளநாட்டு, சர்வதேச விவகாரங்கள் குறித்த பல கேள்விகளுக்கு மக்ரோன் பதிலளித்தார்.
விடுமுறைகாலம் முடிந்து புதிய கல்வி ஆண்டு தொடங்க இன்னும் ஓரிரு நாட்கள் உள்ள நிலையில் நாடுமுழுவதும் வைரஸ் தொற்று மிக வேகம் எடுத்துள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக ஏழாயிரத்து 379 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதனைக் குறிப்பிட்டுக்காட்டி உள்ள சுகாதார அமைச்சு, தொற்றாளர்கள் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகின்ற போதிலும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் தொகையில் குறிப்பிடக்கூடிய அதிகரிப்பு இன்னமும் அவதானிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
இந்தத் தடவை வைரஸ் இளவயதினரிடையே அதிகமாகப் பரவுகின்றது. அத்தகையோரிடம் நோயின் அறிகுறிகள் பெரியளவில் வெளிப்படவில்லை.இதனாலேயே தொற்றாளர்கள் எவரும் உடனடியாக மருத்துவமனைகளை நாடும் நிலை ஏற்படவில்லை என்பதை அதிகாரிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
28-08-2020
வெள்ளிக்கிழமை.
குமாரதாஸன்