பாரிஸ் எங்கும் முகக்கவசம் கட்டாயமாகும்! கொண்டாட்டங்களைத் தவிர்க்கக் கோரிக்கை!

0
366

பாரிஸ் நகரம் உட்பட நாடு முழுவதும் 21 மாவட்டங்கள் தற்சமயம் கொரோனா தீவிரமாகப் பரவும் சிவப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் எல்லைக்குள் சகல பகுதிகளிலும் வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்ற போதிலும் நாட்டை முற்றாக மூடி முடக்காமல் வைரஸை எதிர்கொள்வதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று பிரதமர் Jean Castex இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர் மாநாட்டில் அறிவித்திருக்கிறார்.

சிவப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் அவசியமானால் உள்ளூர் மட்டத்தில் ஒரு பகுதியில் பொது முடக்கத்தை அமுல்செய்ய முடியும்.

பாரிஸ் நகரம் மற்றும் Bouches-du-Rhône ஆகிய பகுதிகளும் Seine-Saint-Denis, Val-de-Marne, Hauts-de-Seine, Seine-et-Marne, Essonne, Val-d’Oise, Yvelines, Sarthe, Rhône, Gironde, Haute-Garonne, Hérault, Gard, Var and Alpes-Maritimes, Guadeloupe, Martinique Guyana ஆகியனவுமே சிவப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

பாரிஸ் நகரப் பகுதி முழுவதும் முகக்கவசம் அணிந்து நடமாடவேண்டும் என்பது அடுத்த சில தினங்களில் கட்டாயமாக்கப்படவுள்ளது என்றும் பிரதமர் இன்று அறிவித்தார். நகர மேயர், மற்றும் காவல்துறை தலைமையகத்தின் ஆலோசனையுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தற்சமயம் மக்கள் அதிகமாகக் கூடுகின்ற தனிப்பட்ட இடங்களிலேயே தொற்றுக்கள் ஏற்படுவதால் திருமணம் போன்ற குடும்ப நிகழ்வுகளை இயன்றவரை தவிர்க்குமாறு நாட்டு மக்களுக்குப் பிரதமர் ஆலோசனை வழங்கி உள்ளார். குடும்ப ஒன்று கூடல்களால் பெரும் எண்ணிக்கையானோர் ஒரேசமயத்தில் குழுக்களாக தொற்றுக்குள்ளாகி வருவது அவதானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை –

கொரோனா வைரஸுக்கு புதிய தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக வெளியாகிய தகவல்கள் குறித்து கருத்து வெளியிடுகையில், திறன் வாய்ந்ததும் பாதுகாப்பானதுமான தடுப்பு மருந்து கிடைத்தால் மட்டுமே அதனை மக்கள் பயன்பாட்டுக்கு வழங்குவோம் என்று சுகாதார அமைச்சர் Olivier Véran செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

(வரைபடம் :BFM செய்திச்சேவை)

27-08-2020
வியாழக்கிழமை.

குமாரதாஸன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here