சீனாவில் இருந்து சிறு தபால் பொதிகளில் வரும் தாவர விதைகளை நடுகை செய்ய வேண்டாம் என்று பிரான்ஸின் விவசாய அமைச்சு பொது மக்களை எச்சரித்திருக்கிறது.
அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, இஸ்ரேல் போன்ற நாடுகளைத் தொடர்ந்து தற்போது பிரான்ஸிலும் இந்த மர்ம விதைப் பொதிகள் பலருக்கும் கிடைத்துள்ளன என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
விதைகளை வாங்குவதற்காக கொள்முதல் கட்டளை எதனையும் வழங்காதவர்களது முகவரிகளுக்கு சிறிய விதைப் பக்கற்றுகள் அடங்கிய பொதிகள் இலவசமாக தபால் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன என்று கூறப்படுகிறது. சீன மாகாணம் ஒன்றில் இருந்து வரும் இப் பொதிகளில் சீன எழுத்துக்கள் காணப்படுகின்றன.
பிரான்ஸின் விவசாய அமைச்சு வெளியிட்டிருக்கும் ஓர் அறிக்கையில் சீன விதைகள் தபாலில் கிடைக்கப்பெற்றால் அவற்றை மண்ணில் விதைக்க வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
மண்ணுக்கு உகந்தவை அல்லாத ஆக்கிரமிப்புத் தாவர இனங்களாகவோ அல்லது சுதேசிய தாவரங்களுக்கு நோய்களைப் பரப்பக்கூடிய இனங்களாகவோ அவை இருக்கக் கூடும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முதலில் அமெரிக்க மாநிலங்களில் கடந்த மாதம் இந்த மர்ம விதைப் பொதிகள் பலரது முகவரிகளுக்கு அனுப்பப்பட்டிருந்தன.தற்போது வேறு பல நாடுகளுக்கும் அதே விதைப் பொதிகள் தபாலில் வந்தடைகின்றன என்று தெரிவிக்கப்படுகிறது.
வீட்டுத்தோட்டங்களில் பயிரிடக்கூடிய சாதாரண மரக்கறி வகைகளின் விதைகள் இவ்வாறு இலவசமாக அனுப்பப்படுவதன் பின்னணி இன்னமும் அறியப்படவில்லை.
25-08-2020
செவ்வாய்க்கிழமை.
குமாரதாஸன்