கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு அருகில் நேற்று (19) புதன்கிழமை மாலை இடம்பெற்ற உந்துருளி விபத்தில் 18 வயது இளைஞர்கள் இருவர் பலியானதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் இருவரும் கோணாவிலைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.
தலைக்கவசமின்றி பயணித்த மூன்று இளைஞர்கள் உந்துருளி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
இதன்போது கிளிநொச்சி காந்திகிராமத்தைச் சேர்ந்த ஞானக்குமாரன் கிருசாந்தன் (வயது 18) , மற்றொரு 18 வயதான இளைஞர் உள்ளிட்ட இருவர் பலியானதுடன், கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய சர்வநாதன் பவிக்சன் என்ற இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.
இவர்கள் மது போதையில் பயணித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை முல்லைத்தீவு மல்லாவிப் பகுதியில் கடந்த 14.08.2020 அன்று இடம்பெற்ற உந்துருளி விபத்தில் படுகாயமடைந்த 19 வயது இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் மல்லாவியைச் சேர்ந்த தாணுயன் (வயது19) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். மற்றொரு இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.
மடுவில் இருந்து துணுக்காய் நோக்கிச் சென்ற உந்துருளியின் குறுக்கே மாடுசென்றதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றதாகத் தெரியவருகிறது.
இரு சம்பவங்கள் தொடர்பாகவும் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.