
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதி ரவிச்சந்திரன், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் தனக்கான தண்டனையை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருக்கிறார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி மதுரை சிறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ள ரவிச்சந்திரன், தமிழக முதலமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதற்கான பரிந்துரையை தங்கள் தலைமையிலான தமிழக அமைச்சரவை ஆளுனருக்கு அனுப்பி 2 வருடங்கள் ஆகிவிட்டன. அவருடைய இசைவு இன்னும் கிடைக்கப் பெறாததால் 29 ஆண்டுகளுக்கும் மேலாக நான் சிறையில் வாடுகிறேன்.
தற்போது எங்கள் விடுதலை தொடர்பான தமிழக அரசின் முடிவுடன் சற்றும் தொடர்பில்லாத பல்நோக்கு கண்காணிப்பு முகமையின் இறுதி அறிக்கை கிடைக்கப் பெற்ற பிறகு தான் அரசின் பரிந்துரை குறித்த முடிவு எடுக்கப்படும் என ஆளுனர் செயலகம் தெரிவித்திருப்பதாக தமிழக அரசு கடந்த பெப்ரவரி 20ம் திகதி சட்டசபையிலும், கடந்த மாதம் 29ம் திகதி சென்னை ஹைகோர்ட்டிலும் தெரிவித்துள்ளது.
ஆளுனரின் இந்நிலைப்பாடு, தங்கள் தலைமையிலான தமிழக அரசின் கொள்கை முடிவினை நடைமுறைப்படுத்த விடாமல் காலவரையின்றி தள்ளிப்போடும் நோக்கிலானது. அரசியல் சட்டப்பிரிவு 161 மற்றும் 163-ஐ தங்கள் தலைமையிலான தமிழக அமைச்சரவையின் அதிகார வரம்புக்குள் அடங்குவதை மறுதலித்து ஆளுனர் என்ற ஒற்றைப் பதவியின் வரம்புக்குள் தன்னிச்சையாக மாற்றிக் கொண்டதாகும்.
சுருங்கக்கூறின் கவர்னர், அரசியல் சாசன பிரிவு 163-ன்கீழ் தமிழக அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையின்படி செயல்படாமல், தன்னிச்சையாக இவ்விஷயத்தில் நடந்து கொண்டு இருப்பது தங்கள் தலைமையிலான அமைச்சரவையின் முடிவினை செல்லாக்காசாக்கி விட்டதற்கு ஒப்பானதாகும்.
எனவே தமிழக அரசு 9.9.2018 அன்று எடுத்த கொள்கை முடிவினை உறுதியாகவும், உடனடியாகவும் நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
தமிழக அரசின் கொள்கை முடிவினையும், ஆளுனர் குறிப்பிடும் பல்நோக்கு கண்காணிப்பு முகமையின் விசாரணையையும் தொடர்புபடுத்த இயலாது. ஏனெனில் விடுதலை அறிவிக்கப்பட்ட 7 பேரும் சுப்ரீம் கோர்ட்டு அளித்த இறுதித் தீர்ப்பின்படி தண்டனை அனுபவித்து விட்டனர். விடுதலைக்கான தகுதியை உரிய சட்டவிதிகளின்கீழ் எப்போதோ அடைந்து விட்டனர்.
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு சிறைவாசிகளின் விடுதலையில் தமிழக அரசு கடந்த ஆண்டு இவ்வாறே செய்தது. அதன்படி குறைந்த பட்சம் தங்கள் அரசின் நிர்வாக அரசாணை மூலம் நான் உள்ளிட்ட 7 பேருக்கு தற்காலிக ஏற்பாடாக, இடைக்கால நிவாரணமாக, தண்டனை நிறுத்தி வைப்பு பரோல் அல்லது விடுமுறை வழங்குவதற்கு ஏதுவாக சிறை விதிகளில் உரிய திருத்தங்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல தமிழக ஆளுனருக்கும் ரவிச்சந்திரன் கடிதம் எழுதியுள்ளார்.