பிரான்ஸில் பாரிஸ் மற்றும் மார்செய் (Bouches-du-Rhône ) பிராந்தியங்கள் வைரஸ் தீவிரமாகப் பரவும் வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கான அரசிதழ் (Journal Officiel) வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி புதிய சுகாதார விதிகளை நடைமுறைக்குக் கொண்டுவரும் அதிகாரம் இப்பிராந்தியங்களின் உள்ளூர் நிர்வாகங்களுக்கும் காவல்துறையினருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.
கடற்கரைகள் போன்ற மக்கள் கூடுகின்ற பொது இடங்களில் கட்டுப்பாடுகளை விதிக்கவும் மக்களின் நடமாட்டங்கள், ஒன்று கூடல்களைக் கண்காணித்துக் கட்டுப்படுத்துதல், வாகனப் போக்குவரத்துகளை வரையறை செய்தல், உணவகங்கள், அருந்தகங்களை மூடுதல் போன்ற விடயங்களில் உள்ளூர் அதிகாரிகள் முடிவுகளை எடுக்க இந்த வர்த்தமானி அறிவிப்பு வழிசெய்கிறது.
இவ்விரு பிராந்தியங்களிலும் வைரஸ் தொற்றும் வேகம் அதிகரித்திருப்பது அதிகாரிகளிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
பாரிஸ் நகரம் தொற்றுத் தீவிரம் மிக்க சிவப்பு வலயமாகப் பிரகடனம் செய்யப்பட்டதை அடுத்து புதிய சுகாதார விதிகள் சனிக்கிழமை (15-08-2020) காலை முதல் அமுலுக்கு வருகின்றன.
கிட்டத்தட்ட நகரப்பகுதிகள் எங்கும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகின்றது. .
பாரிஸ் காவல்தறையின் தலைமையகமும் நகரசபையும் இணைந்து விடுத்திருக்கும் செய்தி அறிக்கையின்படி, பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து நடமாடவேண்டிய புதிய பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முக்கிய கடைத் தெருக்களுக்கு மேலதிகமாக நகரின் கேந்திரப் பகுதியான Champs-Elysées மற்றும் Batignolles, Champ de Mars esplanade, Ecole Militaire, Bastille, Montmartre, Belleville, La Villette ஆகிய இடங்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டிய பகுதிகளாகக் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, சமூக இடைவெளி பேணாமல் பத்துக்கு மேற்பட்டவர்கள் ஒன்று கூடுவதைப் காவல்துறையினர் கண்காணித்துத் தடைசெய்யவுள்ளனர். நகரில் பிற்பகல் பொழுதுகளில் உணவகங்களுக்கு வெளியிலும் தெருக்களிலும் சமூக இடைவெளி பேணாமல் பெரும் எண்ணிக்கையானோர் ஒன்று கூடிப் பொழுதைக் கழிப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. இதனால் காவல்துறையினர் அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரப் பணிப்பாளரால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2ஆயிரத்து 846 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். புதிதாக 27 தொற்றுக் குழுக்களும் (clusters) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதன்படி தொற்றாளர்களின் எண்ணிக்கை கடந்த ஜூன் மாதத்தின் பின்னர் ஆறு மடங்காக உயர்ந்துள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் 15முதல் 40 வயதுக்குட்பட்டவர்களாவர்.
14-08-2020
வெள்ளிக்கிழமை
குமாரதாஸன் .