பிரான்ஸில் இருந்து வரும் தனது பிரஜைகள் உட்பட பயணிகள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று ஓர் அவசர அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது பிரிட்டன்.
பிரான்ஸில் கொரோனா வைரஸ் பரவல் நிலைமை தீவிரமடைவதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்படுவதாக பிரிட்டிஷ் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
தனது பயணிகளுக்கு அவகாசம் எதனையும் வழங்காமல் – கட்டாய தனிமைப்படுத்தல் விதிகள் நாளை சனிக்கிழமை அதிகாலை 4மணிமுதல் நடைமுறைக்கு கொண்டுவரப் படுவதாக – பிரிட்டிஷ் அரசு திடீரென அறிவித்திருப்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரான்ஸில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருக்கும் பிரிட்டிஷ் பிரஜைகள் இந்த திடீர் அறிவிப்பால் பெரும் குழப்பமுற்று ள்ளனர். தனிமைப்படுத்தலில் இருந்து தப்பிப்பிழைப்பதற்காக உடனடியாகவே நாடு திரும்ப அவர்கள் முண்டியடிப்பதால் பயண வழிகளில் நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.
சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பிரிட்டிஷ் உல்லாசப் பயணிகள் தற்சமயம் பிரான்ஸில் விடுமுறையைக் கழித்துக்கொண்டிருக்கின்றனர் என்று மதிப்பிடப்படுகிறது.
பிரிட்டிஷ் அரசின் அறிவிப்பை அடுத்து பாரிஸில் இருந்து லண்டனுக்கான ஈரோ ஸ்ரார் ரயில் சேவைகளில் இடம் பிடிக்க பலரும் முன்பதிவுக்கு முண்டியடிக்கின்றனர் என்று அந்த ரயில் சேவை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இதேபோல பிரான்ஸின் கலே பகுதியில் இருந்து செல்லும் Eurotunnel சேவைகளில் இடம் பிடிக்க பலரும் விரைந்து செல்வதால் அங்கும் பெரும் நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.
முன்பதிவு செய்யாமல் வந்து முண்டியடிக்க வேண்டாம் என்று Eurotunnel நிர்வாகம் பயணிகளைக் கேட்டிருக்கிறது. லண்டனுக்கான விமான சேவைகள் அனைத்திலும் ஆசனப்பதிவுகள் நிறைந்து விட்டன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸ் – லண்டன் விமான ரிக்கெற் கட்டணங்கள் சுமார் 66பவுண்ஸ்களில் இருந்து 450 பவுண்ஸ்களாக எகிறியுள்ளது.
இதேவேளை –
பிரிட்டன் உட்பட வெளிநாட்டுப் பயணிகள் எவரையும் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் விதிகள் எதனையும் பிரான்ஸ் இதுவரை அமுலுக்குக்கொண்டுவரவில்லை. இந்நிலையில் பிரிட்டனின் முடிவு வருந்தத் தக்கது என்று பிரான்ஸ் அரசுத் தரப்பில் கருத்து வெளியாகி உள்ளது.
தற்சமயம் 16 நாடுகளில் இருந்துவரும் பயணிகள் பிரான்ஸின் விமான நிலையங்களில் கட்டாய மருத்துவ சோதனைக்கு மட்டும் உட்படுத்தப்படுகின்றனர்.
பிரிட்டன் எடுத்துள்ள தீர்மானத்துக்கு பதிலடியாக பிரான்ஸ் அந்நாட்டு பயணிகள் மீது புதிய சுகாதாரக் கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
14-08-2020
வெள்ளிக்கிழமை.
குமாரதாஸன்