பிரெஞ்சு தொண்டுப்பணியாளர்கள் அறுவர் நைகர் நாட்டில் ஆயுததாரிகளால் கொலை!

0
190

மேற்கு ஆபிரிக்க நாடான நைகர்(Niger) நாட்டில் பிரெஞ்சு தொண்டுப் பணியாளர்கள் சிலர் உட்பட எண்மர் இனந்தெரியாத ஆயுதபாணிகளால்
கொல்லப்பட்டிருக்கின்றனர்.

தலைநகர் நைமிக்கு( Niamey) தென் கிழக்கே ஒட்டகச் சிவிங்கிகளின் புகலிடமாக விளங்கும் Kouré என்னும் ஒதுக்குப்புறப் பகுதியில் வைத்தே மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆயுதபாணிகள் தொண்டுப்பணியாளர்களது வாகனத்தை இடைமறித்து அவர்களை சுட்டுக்கொன்றுள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. கொல்லப்பட்டவர்களில் வாகனச் சாரதியும் வழிகாட்டி ஒருவரும் அடங்குவர்.இவர்கள் பிரான்ஸ் தன்னார்வத் தொண்டு நிறுவனமான ACTED என்ற அமைப்பின் பணியாளர்கள் என்பதை பிரெஞ்சு அரசு உறுதி செய்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை பகல் இந்த தாக்குதல் நடந்திருப்பதை அந்தப் பிரதேசத்தின் உள்ளூர் ஆட்சியாளர் ஒருவர் உறுதிப்படுத்தி உள்ளார்.உள்ளூர் அதிகாரிகள் வழங்கிய தகவலின் படி கொல்லப்பட்டவர்கள் உல்லாசப் பயணிகள் என்று முதலில் செய்திகள் வெளியாகி இருந்தன.

இஸ்லாமியத் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்கள் நிறைந்த நைகர் நாட்டின் காட்டுப் பிரதேசங்களுக்கு செல்லும் உல்லாசப் பயணிகளுக்கு பிரெஞ்சு அரசு ஏற்கனவே எச்சரிக்கைகளை விடுத்திருக்கிறது. அவ்வாறு செம்மஞ்சள் குறியீடு மூலம் எச்சரிக்கை செய்யப்பட்ட பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொல்லப்பட்டவர்களில் ஒருவர் பெண் ஆவார். இவர் தப்பியோடிய வேளை பிடிக்கப்பட்டு கழுத்து வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. மேலதிக விவரங்கள் தெரியவரவில்லை.

09-08-2020
ஞாயிற்றுக்கிழமை.

குமாரதாஸன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here