அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் மீது முஸ்லிம் ஊர்காவல் படையினரும் படையினரும் இணைந்து நடாத்திய இனப்படுகொலையின் 30வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று புதன்கிழமை மாலை உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
படுகொலை நடைபெற்ற வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள படுகொலைசெய்யப்பட்டவர்கள் ஞாபகார்த்த தூபியருகே இந்த நிகழ்வு நடைபெற்றது.
வீரமுனை கிராம மக்களின் ஏற்பாட்டில் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இந்த நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்ப பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது படுகொலைசெய்யப்பட்டவர்கள் ஞாபகார்த்த தூபியில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஆலய வளாகத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
12.08.1990 வீரமுனை அகதி முகாமில் புகுந்த முஸ்லீம் ஊர்காவல் படையினர் வாள்களால் வெட்டி தாக்குதல் நடத்தியது. இதில் ஆலய பரிபாலனசபை தலைவர் தம்பிமுத்து சின்னத்துரை உட்பட 97 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். வீரமுனையில் 600வீடுகளும், சம்மாந்துறை, மல்லிகைத்தீவு, வளத்தாப்பிட்டி கணபதிபுரம், மல்வத்தை ஆகிய கிராமங்களில் இருந்த 1352 தமிழர்களின் வீடுகள் முற்றாக தீக்கிரையாக்கப்பட்டன. 20.06.1990க்கும் 15.08.1990க்கும் இடைப்பட்ட காலத்தில் வீரமுனையில் மட்டும் 232 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 1600க்கு மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.
1990ஆம் ஆண்டு வீரமுனை மக்கள் முற்றாக அங்கிருந்து விரட்டப்பட்டு அக்கிராமத்தினை அபகரிக்க மேற்கொண்ட முயற்சி அன்றைய பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கோவிந்தன் கருணாகரமின் முயற்சியினால் தடுத்து நிறுத்தப்பட்டு வீரமுனை மக்கள் மீள குடியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.