பிரான்ஸில் சில தினங்களாக நீடித்துவரும் கடும் வெப்பத்தை அடுத்து இடி மின்னல் தாக்குதல்கள் பதிவாகி உள்ளன.
நாட்டின் தென் பகுதியில் லூட்ஸ்(Lourdes – Hautes-Pyrénées) நகரில் திடீர் மின்னல் தாக்குதலினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. இதனால் கேபிள் மின் ரயில் ஒன்று சடுதியாக நிறுத்தப்பட்டதில் அதில் பயணம் செய்தவர்களில் 14 பேர் காயமடைய நேர்ந்துள்ளது. அவர்களில் இருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
லூட்ஸ் மலைப்பகுதியில் மிக உயர்ந்த Peak of Jer உச்சியில் இருந்து மிகத் தாழ்வில் உள்ள நகரப்பகுதிக்கு உல்லாசப் பயணிகளை ஏற்றி இறக்கும் கேபிள் ரயில் பெட்டியில் பயணித்தவர்களே இவ்வாறு காயமடைந்தனர்.
நேற்று திங்கள் மாலை லூட்ஸ் மலைப் பிரதேசத்தை மிகப்பலமான இடி மின்னல் தாக்கியவேளை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, துளுஸ் (Toulous) பிரதேசத்திலும் பலமான இடி முழக்கம் மக்களை கிலி கொள்ளச் செய்திருக்கிறது. நேற்று திங்கள் விடிகாலை வேளை பெரும் குண்டு வெடிப்பைப் போன்று கேட்ட இடியோசையினால் பலரும் திடுக்குற்று கண்விழித்தனர் என்று செய்தி வெளியாகி இருக்கிறது.
தலைநகர் பாரிஸ் உட்பட நாட்டின் எல்லா பகுதிகளிலும் வெப்ப அனல் வீச்சு மக்களை வாட்டியெடுத்து வருகின்றது. பாரிஸ் நகரம் உட்பட 15 மாவட்டங்கள் தொடர்ந்து சிவப்பு எச்சரிக்கை குறியீட்டில் உள்ளன. வேறு 53 மாவட்டங்கள் அதற்கு அடுத்த நிலையில் செம்மஞ்சள் எச்சரிக்கை குறியீட்டில் வைக்கப்பட்டுள்ளன.
தற்போதைய வெப்பக் கால நிலை தணிகின்ற சமயத்தில் ஆங்காங்கே கடும் இடிமின்னலுடன் கூடிய புயல் மழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
(படம் : 1 இடி மின்னல் காட்சி, 2 லூட்ஸ் மலை கேபிள் ரயில்.)
11-08-2020
செவ்வாய்க்கிழமை.
குமாரதாஸன்