மொறீஸியஸ் தீவின் அருகே மூழ்கும் நிலையில் உள்ள கப்பல் ஒன்றில் இருந்து கடலில் பெருமளவு எண்ணெய் கசிந்து கொண்டிருக்கிறது. இதனால் அந்நாட்டின் கரையோரப்பகுதிகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை அடுத்து அங்கு சுற்றுச் சூழல் அவசரகால நிலைமையை அரசு பிரகடனப்படுத்தி உள்ளது.
தீவின் அழகிய கடற்கரைகளில் இறங்க வேண்டாம் என்று பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
மொறீஸியஸின் தென்கிழக்கு கடலில் சில வாரங்களாக பனாமா கொடியுடன் தரித்து நிற்கும் ஜப்பானில் பதிவு செய்யப்பட்ட MV Wakashio என்ற கப்பலில் இருந்தே எண்ணெய் கசிகிறது.கப்பல் கடலில் மூழ்கும் ஆபத்து காணப்படுகிறது. கப்பல் சிப்பந்திகள் அனைவரும் அதிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
200 தொன் டீஸல், 3ஆயிரத்து 800 தொன் கனரக எண்ணெய் என்பன கப்பலில் உள்ளன என்று உள்ளூர் பத்திரிகைகள் தெரிவித்துள்ளன. பெருமளவு எண்ணெய் கடலில் கசிந்து பரவிவருவதால் கரையோரமாக உள்ள ஈர நிலங்களுக்குப் பேராபத்து ஏற்பட்டிருப்பதாக சூழலியலாளர்கள் எச்சரித்துள்ளனர். மொறீஸியஸ் புளு பேய் (Blue Bay Marine Park) கடலியல் பூங்காவும் அச்சுறுத்தலை எதிர்நோக்கி உள்ளது.
கடலில் பெருமளவில் எண்ணெய் கலந்து பரவுவதைத் தடுப்பதற்கான போதிய தொழில்நூட்ப வளங்கள் இல்லாத கையறு நிலையில் மொறீஸியஸ் அரசு பிரான்ஸின் அவசர உதவியைக் கோரியிருக்கிறது.
இதனையடுத்து மொறீஸியஸ் அருகே உள்ள பிரான்ஸின் ரியூனியன் (Réunion) தீவில் இருந்து இராணுவ விமானங்கள் அந்நாட்டுக்கு விரைந்துள்ளன.
பிரெஞ்சு கடற்படைத் தொழில்நுட்பவியலாளர்கள் எண்ணெய்க் கசிவுத் தடுப்பு சாதனங்களுடன் அங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
“உயிரின் பல்வகைமைக்கு (biodiversity) எங்கு ஆபத்து நேர்கின்றதோ அங்கே அவசரமாக இறங்கிச் செயற்பட வேண்டியது அவசியம். அந்த வகையில் பிரான்ஸ் மொறீஸியஸ் மக்களுடன் இணைந்து அங்கே நிற்கும்” – என்று அதிபர் மக்ரோன் தனது ரூவீற்றர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
08-08-2020
சனிக்கிழமை.
குமாரதாஸன்.