அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக பாரிஸ் நகரம் அடங்கலாக ஒன்பது மாவட்டங்களில் இன்று சிவப்பு எச்சரிக்கை (vigilance rouge) விடுக்கப்பட்டிருக்கிறது.
காலநிலை அபாய எச்சரிக்கைகளில் மிக உயர்ந்த அளவீடான சிவப்பு எச்சரிக்கை இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4மணிமுதல் Haute-Normandie, Seine-Maritime, Eure, Oise, Yvelines, Val-d’Oise, Paris, Seine-Saint-Denis, Essonne ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு விடுக்கப்பட் டிருக்கிறது.
இப் பிரதேசங்களில் அனல் வெப்ப நிலை 40 முதல் 42 பாகை வரை அதிகரிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே நாட்டின் பல பகுதிகளிலும் 53 மாவட்டங்கள் சிவப்புக்கு அடுத்த நிலையில் செம்மஞ்சள் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தலை நகரில் வெப்ப அனல் நாளாந்த வாழ்வைப் பெரிதும் பாதித்திருக்கிறது. குறிப்பாக மூதாளர் இல்லங்களில் தங்கியுள்ள வயோதிபர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.சுகாதார அமைச்சர் Olivier Véran இன்று காலை Dordogne பகுதியில் உள்ள மூதாளர் இல்லம் ஒன்றுக்குச் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டார்.
தற்போதைய வெப்பக் காலநிலை (vague de chaleur ) வரும் புதன்கிழமை வரை நீடிக்கக் கூடும் என்று வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
சாதாரண தண்ணீர், பழங்கள் போன்ற குளிரான உணவுகளைக் கூடுதலாக உட்கொள்ளுமாறும் குளிரூட்டப்பட்ட பானங்களைத் தவிர்க்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
விடுமுறையில் வேறுபகுதிகளுக்குச் சென்று திரும்புவோர் எச்சரிக்கை செய்யப்பட்டுள் ளனர். நெடுஞ்சாலைகளில் வாகன விபத்துகள் குறித்தும் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
நாட்டின் பல பகுதிகளில் காட்டுத்தீ பரவிய சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்திருப்பதால் காடுகளுக்குள் உல்லாசப் பயணம் செய்வது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
07-08-2020
வெள்ளிக்கிழமை.
குமாரதாஸன்