ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைப்பு! அதிபர் மக்ரோன் பெய்ரூட் விரைகின்றார்!!

0
202

பெய்ரூட் துறைமுக வெடிப்புச் சம்பவத்தில் 21 பிரெஞ்சுப் பிரஜைகளும் காயமடைந்துள்ளனர் என்று தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த அனர்த்தத் தில் மொத்தம் நான்காயிரம் பேர் வரை காயமடைந்துள்ளனர்.104 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதேசமயம் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காணாமற் போயுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பெய்ரூட்டில் உள்ள பிரெஞ்சு தூதரகத்துடன் தொடர்பு கொண்டு அங்குள்ளோர் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதற்காக +961 1 420 292 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்சமயம் பூகம்பப்பகுதி போன்று காட்சி தரும் பெய்ரூட்நகரில் சுமார் மூன்று லட்சம் பேர் தமது வசிப்பிடங்களை இழந்துள்ளனர்.

இவ்வாறு பேரழிவைச் சந்தித்துள்ள பெய்ரூட் நகர மக்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் ஈபிள் கோபுரத்தின் மின் விளக்குகள் இன்று இரவு அணைக்கப் படுகின்றன என்று பாரிஸ் நகரசபை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை பாரிஸ் நகரசபை அவசரகால நிதி உதவியாக ஒரு லட்சம் ஈரோக்களை பெய்ரூட் நகர நிர்வாகத்துக்கு வழங்குவதாக மேயர் ஆன் கிடல்கோ தனது ரூவீற்றர் தளத்தில் தெரிவித்திருக்கிறார்.

பெரும் நெருக்கடியை எதிர் கொண்டுள்ள லெபனான் மக்களுக்கும் ஆட்சியாளர்களுக் கும் பிரான்ஸின் பலமான ஆதரவைத் தெரிவித்திருக்கும் அதிபர் மக்ரோன், நாளை வியாழக்கிழமை பெய்ரூட்டுக்கு விஜயம் செய்கிறார். அவருடன் பிரெஞ்சு வெளிவிவ கார அமைச்சர் Jean-Yves Le Drian
அவர்களும் உடன் செல்கிறார்.

நிலைகுலைந்து போயிருக்கும் லெபனான் நாட்டின் ஆட்சித் தலைவர்களையும் அங்குள்ள எல்லா அரசியல் தரப்பினரையும் நேரில் சந்தித்து நிலைமையை மதிப்பீடு செய்வதற்காகவே அதிபர் மக்ரோன் அங்கு செல்கிறார்.

ஏற்கனவே பிரான்ஸின் மூன்று இராணுவ சரக்கு விமானங்கள் அவசர மருத்துவ உதவிப் பொருள்களுடன் பெய்ரூட் நகருக்கு விரைந்துள்ளன.நிபுணத்துவம் வாய்ந்த சிவில் மீட்புப் படையணியினர் 55 பேரும் இந்த விமானங்களில் சென்றிருக்கின்றனர்.

பெய்ரூட் துறைமுகப் பகுதியில் சுமார் 2ஆயிரத்து 750 தொன் அமோனியம் நைட்ரேட் சேமித்து வைக்கப்பட்டிருந்த களஞ்சியத்தில் தீ பரவியதை அடுத்தே இந்த மோசமான வெடிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன என்பது தற்சமயம் உறுதியாகி உள்ளது.

நாட்டின் ஒரேயொரு கப்பல் துறைமுகமும் வெடிப்புகளினால் சிதறிச் சின்னாபின்ன மாகியிருப்பதை அடுத்து லெபனானுக்கு கடல்வழியான உணவு மற்றும் பொருள் விநியோகங்கள் யாவும் தடைப்பட்டிருக் கின்றன. துறைமுகப்பகுதியில் அமைந் திருந்த கோதுமை மா களஞ்சியங்களும் அழிவுண்டு போயிருப்பதால் நாட்டில் கோதுமை மாவுக்கு பெரும் தட்டுப் பாடு ஏற்பட்டிருக்கிறது.

05-08-2020
புதன்கிழமை.
20.45

குமாரதாஸன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here