அமெரிக்க மாநிலங்கள் எங்கும் பல நூற்றுக்கணக்கானவர்களுக்கு தாவர விதைகள் உள்ளடங்கிய மர்மக் கடிதப் பொதிகள் கிடைத்துள்ளன என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சீனாவில் இருந்து அனுப்பப்பட்டவை என்று நம்பப்படும் இப்பொதிகளில் காணப்படும் விதைகளைப் பயிரிடவோ அன்றி தரையில் வீசவோ வேண்டாம் என்று அமெரிக்க மக்களை அந்நாட்டு அதிகாரிகள் எச்சரித்திருக்கின்றனர்.
வோஷிங்டன், லூஸியானா, வேர்ஜீனியா, கென்சாஸ் போன்ற அமெரிக்க மாநிலங்கள் பலவற்றினதும் விவசாய சேவைப் பிரிவுகள் தமது பகுதிகளைச் சேர்ந்த பொது மக்களுக்கு இந்த மர்ம விதைகள் குறித்து அறிவுறுத்தும் அறிக்கைகளை வெளியிட்டு
ள்ளன.
காய்கறிகள், பூங்கன்றுகள், மூலிகைகள் போன்றவற்றின் விதைகள் சிறிய பொதிகளில் இடப்பட்டு கடிதம் மூலம் பெரும் எண்ணிக்கையானோரின் முகவரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. பொதிகளில் சீன எழுத்துக்கள் காணப்படுவதை அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் படங்களில் அவதானிக்க முடிகிறது.
கொரோனா வைரஸ் நெருக்கடிக்குப் பின்னர் மக்களிடையே வீட்டுத் தோட்டங்களை உருவாக்கும் ஆர்வம் அதிகரித்திருப்பதால் இந்த மர்ம விதைகளை இலவசமாகப் பெற்ற அமெரிக்கர்கள் அவற்றை விதைத்துப் பராமரிக்கத் தொடங்கி உள்ளனர் என்று கூறப்படுகிறது.
இவை சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி பயிரினங்களை நாசம் செய்யக்கூடிய ஆக்கிரமிப்புத் தாவர இனங்களின் விதைகளாக இருக்கலாம். உள்ளூர் தாவரங்களுக்கு நோயைப்பரப்பும் தன்மையைக் கொண்டிருக்கலாம்.அத்துடன் கால்நடைகளுக்கும் பாதிப்பை உண்டுபண்ணலாம் என்று அமெரிக்காவின் ஓஹியோ மாநில பல்கலைக்கழகத்தின் விவசாயத் துறை நிபுணர்கள் எச்சரித்திருக்
கின்றனர்.
விதைகளை இணையச் சந்தைகளில் விற்கும் முகவர்களின் வியாபார உத்தியா அல்லது அமெரிக்காவுக்குள் நச்சு விதைகளையும் ஆபத்தான விவசாயக் களைகளையும் பரப்புகின்ற சீனாவின் சதியா இதன் பின்னணி என்பதைக் கண்டறிவதில் அமெரிக்கா தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
கொரோனா வைரஸ் அனர்த்தத்தை அடுத்து அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே முரண்பாடுகள் முற்றித் தீவிரமடைந்து புதியதொரு பனிப்போர் யுகம் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
04-08-2020
செவ்வாய்க்கிழமை.
குமாரதாஸன் .