தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தமிழீழத் தனியரசுதான் தீர்வு என்று மானிப்பாய் – சுதுமலையில் வெளிப்படுத்திய 33 ஆவது ஆண்டு இன்றாகும். இன்றுவரை சுதுமலைப் பிரகடனம் என்று வர்ணிக்கப்படுகின்ற தேசியத் தலைவரின் அன்றைய உரையானது தலைவரின் விலைபோகாத தன்மையை வெளிப்படுத்தி நின்றது.
தமிழீழத் தேசியத் தலைவர் கடந்த 1987 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி சுதுமலையில் இந்த விசேட உரையை ஆற்றியிருந்தார். இந்திய இராணுவ அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், லட்சக்கணக்கான மக்களுக்கு முன்னிலையில் தமிழீழ தனியரசே தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு ஆகும் என்பதை தேசியத் தலைவர் வெளிப்படுத்தினார்.
முதன்முதலாக லட்சக்கணக்கான தமிழ் மக்களுக்கு முன்னிலையில் தோன்றிய தமிழீழ தேசியத் தலைவர் தமிழீழப் பிரகடனத்தை வெளியிட்ட 33 ஆவது ஆண்டில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் இன்று சர்வதேச மயப்படுத்தப்பட்டிருக்கின்றது. போராட்டம் மௌனித்திருக்கின்ற போதிலும் தமிழீழ போராட்டத்தின் இலட்சிய வேட்கை மேலும் வீறுகொண்டு எழுந்திருக்கின்றது.
இந்திய அரசாங்கத்தின் சூழ்ச்சிகளுக்கு இரையாகாமல், இந்தியாவின் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இந்திய உளவுத்துறை அதிகாரிகளின் பிடியில் இருந்து தாயகம் வந்த தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை மக்களுக்கு அறிவித்தார்.
ஆனாலும் இந்தியாவைப் பகைக்காமல் இந்திய அரசை அனுசரித்துப்போவதாகவே அப்போதும் தலைவர் அறிவித்தார். அமைதிப்படை என்ற போர்வையில் ஈழத்திற்கு வந்திருந்த இந்தியப் படைகளிடம் புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா கேட்டுக்கொண்டதை, துளியளவேனும் விருப்பமின்றி ஏற்றுக்கொண்ட தேசியத் தலைவர், அன்றைய காலத்திலும் இந்தியாவுக்கு தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் நோக்கில் ஆயுதக் கையளிப்புக்கு உடன்பட்டார்.
இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த தலைவர் விடுதலைப் போராட்டம் நெருக்கடியான நிலையில் இருப்பது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவே மானிப்பாயில் உள்ள சுதுமலை அம்மன் ஆலயத்திற்கு முன்பாக இருந்த மைதானத்தில் திடீரென பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. தேசியத் தலைவரைக் காண்பதற்காகவும் புலிகளின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ளவதற்காகவும் அங்கு வருகை தந்திருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு முன்னர் தேசியத் தலைவர் உரையாற்றினார்.
நாங்கள் இந்தியாவை நேசிக்கின்றோம் என்ற தலைப்பில் உரையாற்றிய தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்,
‘எம்மக்களது விடுதலைக்காக, எம்மக்களது விமோசனத்துக்காக நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்திய அரசிடம் ஒப்படைக்கிறோம். தமிழீழ மக்களின் ஒரே பாதுகாப்புச் சாதனமாக இருந்து வந்த இந்த ஆயுதங்களை இந்திய அரசு எம்மிடத்திலிருந்து பெற்றுக் கொள்வதிலிருந்து தமிழீழ மக்களின் பாதுகாப்பு என்ற பெரும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறது. ஆயுதக் கையளிப்பு என்பது இந்தப் பொறுப்பு மாற்றத்தை தான் குறிக்கிறது.
நாம் ஆயுதங்களை கையளிக்காது போனால் இந்திய இராணுவத்துடன் மோதும் துர்ப்பாக்கிய சூழ்நிலை ஏற்படும். இதை நாம் விரும்பவில்லை. தமிழீழத் தனியரசே தமிழீழ மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை அளிக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கையுண்டு. தமிழீழ இலட்சியத்துக்காகவே நான் தொடர்ந்து போராடுவேன்.
தமிழீழ மக்களின் நலன்கருதி இடைக்கால அரசில் பங்கு பற்ற அல்லது தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை எமது இயக்கத்துக்கு ஏற்படலாம். ஆனால் நான் எந்தக் காலகட்டத்திலும் தேர்தலில் பங்குபற்றப் போவதில்லை. இதை நான் மிகவும் உறுதியாகச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.
எமது அரசியல் தலைவிதியை இந்தியா என்கின்ற எமது வல்லமைக்கு அப்பாற்பட்ட ஒரு மாபெரும் வல்லரசு நிச்சயிக்க முடிவுசெய்திருக்கும் நிலையில் எம்மால் என்ன செய்ய முடியும்?
இந்தியப்பிரதமர் எனக்கு சில உறுதிப்பாடுகளை வழங்கினார். எமது மக்களின் பாதுகாப்பிற்குரிய உறுதியினையும் அவர் வழங்கினார். இந்தியப் பிரதமரின் ஒளிவுமறைவற்ற நேர்மையில் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. அவரளித்த உறுதியிலும் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது.
பேரினவாத சிங்கள அரசாங்கம் மீண்டும் தமிழின ஒழிப்பைத் தொடங்குவதற்கு இந்தியா அனுமதியமளிக்க மாட்டாது என்று நாம் நம்புகின்றோம். இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்திய அமைதிப்படையிடம் எமது ஆயுதங்களை ஒப்படைக்கத் தீர்மானித்துள்ளோம்.
நாம் இந்தியாவை நேசிக்கின்றோம். இந்திய மக்களை நேசிக்கின்றோம். இந்தியப் படைகளுக்கு எதிராக நாம் எமது ஆயுதங்களைப் பயன்படுத்தும் கேள்விக்கே இடமில்லை. எமது எதிரிகளிடம் இருந்து எம்மைப் பாதுகாக்கும் பொறுப்பினை இந்தியப்படைகள் ஏற்கின்றன.
எமது ஆயுதங்களை நாம் இந்தியப்படையினரிடம் ஒப்படைப்பதன் மூலம் ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரது உயிருக்கும் முழுப் பாதுகாப்பை வழங்கும் பொறுப்பினை இந்திய அரசாங்கம் ஏற்கின்றது என்பதை வலியுறுத்திக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இந்தியா எடுத்துக்கொண்ட முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவும் இல்லை. இந்த வாய்ப்பினை அவர்களுக்கு வழங்குவோம்’ என்றும் தலைவர் தெரிவித்தார்.
ஆனால், புலிகளினதும் மக்களினதும் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கி புலிகளிடம் இருந்து ஆயுதங்களைக் கழைந்த இந்திய இராணுவம் சிங்களப் படைகளுடன் சேர்ந்து புலிகளையும் தமிழ் மக்களையும் அழித்தொழிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. இந்தியப் படையினர் தமிழ் மக்களைக் கொன்று குவித்தபோது இந்தியப் பிரதமர் வாய்மூடி மௌனியாக இருந்தார்.
புலிகளுக்கும் மக்களுக்கும் பாதுகாப்பு வழங்குவோம் என்று கூறிய உறுதிமொழியை இந்தியா மீறியது. இந்தியப் படைகளின் தாக்குதல்களை நிறுத்துமாறு புலிகள் தொடர்ந்தும் இந்தியாவைக் கோரிய போதிலும் இந்தியா அதற்குச் செவிசாய்க்கவில்லை. இதனால் புலிகள் இந்தியப் படைகளுக்கு எதிராக போராட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதன்பின்னர் இந்தியப் படைகள் வெளியேற வேண்டிய நிலையும் ஏற்பட்டது. தொடர்ந்து வந்த காலப்பகுதியில் ஈழப்போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது. ஆனாலும், இறுதி யுத்த காலத்தில் இந்திய அரசாங்கமே சிறிலங்காவுக்கு பெரும் படைக்கல உதவிகளை வழங்கியது. தமிழ் மக்களினது மிகப்பெரும் அழிவுக்கும் இந்தியாவே வழிகோலியது. சிங்கள அரசாங்கத்தை தனது நண்பனாக ஏற்றுக்கொண்ட இந்தியா தமிழ் மக்களையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் அழித்தமைக்கு என்றோ ஒருநாள் பதில் கூறியே ஆகவேண்டும்.
(நன்றி:ஈழமுரசு)