இந்தியாவில் கொரோனா பாதிப்பு 18 லட்சத்தை கடந்தது. உலக அளவில் மொத்த பாதிப்பு 2 கோடியை நெருங்குகிறது. நாட்டில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 52,972 பேர் கொரோனா நோய் தொற்றின் காரணமாக புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையானது 18,03,696 ஆக உயர்ந்துள்ளது. இதில் 5,79,357 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,11,86,203 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரே நாளில் மேலும் 771 உயிரிழப்புக்கள் பதிவாகி உள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 38,135ஆக உயர்ந்துள்ளது.
உலகளாவிய அளவில் 1 கோடியே 80 லட்சத்து 11,763 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் சுமார் 10 லட்சம் பேர் கடந்த 4 நாட்களில் நோய் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் பதிவான மொத்த நோய் தொற்று எண்ணிக்கையில் பாதி அமெரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா, கரீபியன் பிராந்தியத்தில் பதிவாகி உள்ளது. கொரோனா வைரசினால் அமெரிக்கா மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு 46 லட்சத்து 57,693 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மொத்தம் 1 லட்சத்து 54,793 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து பிரேசிலில் 27 லட்சத்து 33,677 பேர் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் 94,104 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதித்த 6 லட்சத்து 87,941 பேர் மரணமடைந்துள்ளனர். தற்போது தினசரி சுமார் 2 லட்சத்துக்கு அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இதே நிலை தொடர்ந்தால், இன்னும் 10 நாளில் மொத்த பாதிப்பு 2 கோடியை எட்டும்.