பிரான்ஸில் கடும் கோடைக் காலநிலைக்கு மத்தியில் பல இடங்களில் காட்டுத் தீ பரவி வருகிறது.
நாட்டின் தெற்கு எல்லையில் அத்திலாந்திக் கடலோரம் அமைந்துள்ள ஷிபேர்டா பைன் மரக்காட்டில் (Chiberta forest) இன்று மாலை பரவிய பெரும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் பணிகள் இரவிரவாக நீடிக்கின்றன.தீ எவ்வாறு அங்கு பரவியது என்பது இன்னமும் கண்டறியப்படவில்லை.
வான் வழியாக இரண்டு தண்ணீர் தாரை விமானங்களும் தரையில் நூற்றுக்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் இணைந்து சுமார் 250 ஹெக்டேயர் பரப்பிலான இந்தக் காட்டில் தீயை அணைக்கப் போராடி வருகின்றனர்.ஏற்கனவே சுமார் 50 ஹெக்டேயர் காட்டுப் பகுதியை தீ அழித்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
வீடு ஒன்று தீக்கிரையானதை அடுத்து அருகே உள்ள வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.வாகனங்களும் அங்கிருந்து அப்புறப்படுத்தப் பட்டுள்ளன.
பிரெனி அத்திலாந்திக்(Pyrénées-Atlantiques) பிராந்தியத்தில் Anglet நகரம் அருகே கடற்கரையோரமாக அமைந்துள்ள இந்த பைன் மரக்காட்டுப்பகுதி உல்லாசப் பயணிகள் வருகை தரும் முக்கிய பிரதேசங்களில் ஒன்றாகும்.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளிலும் வெப்பநிலை, 40 பாகை வரை அதிகரித்துள்ளது. இதனால் வெப்ப அனல் வீச்சு அபாயம் உள்ள மாவட்டங்களில் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டி ருக்கிறது. பாரிஸ் நகரில் வெப்பநிலை அதிகரிப்புடன் வளியும் மாசடைந்திருப்பதால் வெள்ளிக்கிழமை முழுநாளும் வாகனப் போக்குவரத்துகள் கட்டுப்படுத்தப்படவுள்
ளன.
30-07-2020
வியாழக்கிழமை.
குமாரதாஸன்