பிரான்ஸின் வடக்கே RN2 தேசிய நெடுஞ்சாலையில் இன்று பிற்பகல் பல வாகனங்கள் தொடராக மோதிய பெரும் விபத்தில் கார் ஒன்றில் பயணித்த நான்கு சிறுவர்கள் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.பலர் காயமடைந்துள்ளனர்.
Aisne பிரதேசப்பகுதியில் Laon என்ற இடத்திலேயே பிற்பகல் மூன்று மணியளவில் இந்த அனர்த்தம் நிகழ்ந்திருக்கிறது.
விபத்தில் கனரக கொள்கலன் வாகனம் ஒன்றும் இரண்டு வான்கள், இரண்டு கார்கள் என்பனவும் ஒன்றோடு ஒன்று மோதுண்டன என்று தகவல் வெளியாகி உள்ளது. விபத்தில் சிக்கிய கார்களில் ஒன்று தீப்பற்றி எரிந்ததில் உள்ளே சிக்குண்ட சிறுவர்கள் நால்வரும் மீட்புக் குழுவினர் அவ்விடத்துக்கு வருவதற்கு முன்னரே தீயில் கருகி உயிரிழந்துவிட்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
காரின் சாரதி பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் அவசர நோயாளர் காவு உலங்குவானூர்தி (அம்புலன்ஸ் ஹெலிக்கொப்ரர்) மூலம் Amiens மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு ள்ளார்.
உயிரிழந்த சிறுவர்கள் 9 முதல் 14 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்று முற்கொண்டு வெளியான தகவல்கள் தெரிவித்தன.
போக்குவரத்துத்துறை அமைச்சர் தலைமையில் அரச அதிகாரிகள் குழு ஒன்று விபத்து நடந்த இடத்துக்கு விரைந்துள்ளது.
நாட்டின் தென்கிழக்கே Drôme மாவட்டத்தில் A7 நெடுஞ்சாலையில் கடந்த 20 ஆம் திகதி முன்னிரவு இடம்பெற்ற விபத்தொன்றில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த சிறுவர்கள் ஐவர் தீயில் எரிந்து உயிரிழந்தமை தெரிந்ததே.
(படங்கள் : Radio France)
28-07-2020
செவ்வாய்க்கிழமை.
குமாரதாஸன்