இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் : ஐ.நா. அதிர்ச்சித் தகவல்!

0
98


ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பில் கேரளா உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் சென்று இணைந்திருப்பது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டது.

காஷ்மீரில் கடந்த ஆண்டு பயங்கர வாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே உச்சக்கட்ட மோதல் நடந்து வந்த நிலையில், இந்தியாவில் தங்கள் அமைப்புக்கென்று மாகாணம் (அரபு மொழியில் ஹிந்த் விலயா) ஒன்றை நிறுவியுள்ளதாக ஐ.எஸ். அமைப்பும் அறிவித்து இருந்தது.

இதை மெய்ப்பிக்கும் வகையில் ஐ.நா.வின் அறிக்கை ஒன்று வெளியாகி இருக்கிறது. ஐ.நா.வின் பகுப்பாய்வு ஆதரவு மற்றும் தடைகள் கண்காணிப்புக்குழுவின் பயங்கரவாதிகள் தொடர்பான இந்த 26-வது அறிக்கையில் கேரளா மற்றும் கர்நாடகாவில் கணிசமான எண்ணிக்கையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

இது குறித்து அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

2019-ம் ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்ட ஐ.எஸ். அமைப்பின் இந்திய கிளையில் (ஹிந்த் விலயா) 180 முதல் 200 வரை உறுப்பினர்கள் உள்ளதாக உறுப்பு நாடு ஒன்று தெரிவித்து உள்ளது. இந்தியாவின் கேரளா மற்றும் கர்நாடகாவில் கணிசமான எண்ணிக்கையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் உள்ளனர்.

இதைப்போல ஐ.எஸ்., அல்கொய்தா மற்றும் இவற்றுடன் தொடர்புடைய அமைப்புகள், ஆப்கானிஸ்தானின் நிம்ருஸ், ஹெல்மந்த், காந்தகார் மாகாணங்களில் இயங்கி வரும் தலீபான் அமைப்பின் கீழ் இந்திய துணைக்கண்டத்தில் இயங்கி வருகின்றன.

வங்காளதேசம், இந்தியா, மியான்மர், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் அல்கொய்தா அமைப்புக்கென 150 முதல் 200 பயங்கரவாதிகள் வரை தீவிரமாக இயங்கி வருகின்றனர். இந்த அமைப்பின் இந்திய துணைக்கண்ட தலைவராக ஓசாமா மக்மூத் செயல்பட்டு வருகிறார்.

இந்த துணைக்கண்ட அல்கொய்தா அமைப்பு தங்களது முந்தைய தலைவரின் படுகொலைக்கு பதிலடியாக இந்த பிராந்தியத்தில் தாக்குதலுக்கு திட்டமிட்டு வருகின்றனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பல்வேறு பயங்கரவாத அமைப்புகளால் இந்தியாவுக்கு அடிக்கடி அச்சுறுத்தல் ஏற்பட்டு வரும் நிலையில், ஐ.எஸ்., அல்கொய்தா பயங்கரவாதிகளும் இந்தியாவில் கணிசமாக இயங்கி வருவதாக வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here