மட்டக்களப்பு – செங்கலடியில் இன்று (27.07.2020) திங்கட்கிழமை காலை எட்டு மாவட்டங்களினதும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் முன்னெடுக்கவிருந்த போராட்டம் நீதிமன்றின் ஊடாக பெறப்பட்ட தடை உத்தரவினால் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
வடகிழக்கில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பினர் இணைந்து ஏறாவூர் காவல்துறையிடம் இரு தினங்களுக்கு முன்னர் அனுமதி பெற்று இன்று காலை கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் காலை 10 மணிக்கு செங்கலடியில் ஒன்றுகூடிய நிலையில் அங்குவந்த காவல்துறையினர் நீதிமன்ற தடையுத்தரவினை காட்டி குறித்த போராட்டத்தினை நடாத்த முடியாது எனவும் தெரிவித்து தடுத்து நிறுத்தியுள்ளனர்.
தற்போது தேர்தல் நிலைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் வடகிழக்கு தமிழ் மக்கள் தமிழ் தேசியத்திற்கும் தமிழர்களின் பிரச்சினைக்கு ஆதரவாகவும் செயற்படுவோரை தெரிவுசெய்யவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு தொடர்ச்சியாக முன்கொண்டுசெல்லும் வகையிலும் இந்த போராட்டம் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
(உதயன்)