பிரான்சு உணவகங்களின் வெளி இருக்கைகளை வெப்பமூட்டத் தடை!

0
171

உணவகங்கள், அருந்தகங்கள் போன்றவற்றின் வெளி இருக்கைகளில் (Terrasses) வெப்பமூட்டிகளைப் (chauffage) பயன்படுத்துவது 2021 ஆம் ஆண்டு குளிர் காலம் முதல் தடைசெய்யப்படவுள்ளது.

சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்கு எடுக்க வேண்டிய கடப்பாடுகளின் அடிப்படையில் இந்தத் தடையை நடைமுறைப்படுத்த பிரான்ஸ் அரசு முடிவு செய்திருக்கிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக உணவகங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்து இருப்பதால் வெப்பமூட்டிகள் மீதான இத் தடையை இந்த வருடம் அமுலாக்குவதைத் தவிர்த்து அடுத்த ஆண்டு குளிர் காலம் முதல் நடைமுறைப்படுத்த முடிவுசெய்யப்பட்டது என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டு ள்ளது.

குளிர் காலங்களில் உணவகங்கள், கபேக்கள் போன்றவற்றின் வெளி இருக்கைப் பகுதிகள் வாடிக்கையாளர் களைக் கவரும் வகையில் வெப்பமாக்கும் கருவிகள் மூலம் வெம்மையூட்டப்படுவது வழக்கம். இந்த வெப்பக் கருவிகள் பெருமளவு சக்தி மூலங்களை விரயமாக்குவதுடன் சூழலின் சமநிலையையும் பாதிப்பதால் நகரங்களில் இதனைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது.

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக அதிபர் மக்ரோனால் நியமிக்கப்பட்ட சிவில் சமூகக் குழுவும் (la Convention citoyenne) பொது இடங்களில் வெப்பம் மற்றும் குளிரூட்டிகளைத் தடை செய்ய வேண்டும் என்ற முன்மொழிவை விடுத்திருந்தது.

இதனை ஏற்றுக் கொண்டுள்ள அரசு முதற்கட்டமாக அவசியமற்ற இடங்களில் வெப்பமூட்டிகளின் பாவனையைத் தடை செய்ய முடிவு செய்துள்ளது.

இதே போன்று வீடுகளை வெப்பமாக்குவத ற்காக எரிபொருள்கள் மற்றும் நிலக்கரி மூலம் இயங்கும் வெப்பமூட்டும் கொதிகலன்களைப் (oil and coal-fired boilers) பயன்படுத்துவதைப் படிப்படியாக குறைத்து இல்லாமற் செய்வதற்கும் திட்டமிடப்பட்டு ள்ளது.

இன்று அதிபர் மக்ரோன் தலைமையில் நடைபெற்ற சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சபையின் கூட்டத்தின் முடிவில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் செல்வி Barbara Pompili இத்தகவல்களை வெளியிட்டார்.

27-07-2020
திங்கட்கிழமை.

குமாரதாஸன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here