பிரான்ஸின் Nantes நகர தேவாலய தீ அனர்த்தம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் தேவாலயத்துக்கு தானே தீ மூட்டினார் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
தேவாலயத்தில் தொண்டு அடிப்படையில் பணியாற்றி வந்தவரான 39 வயதுடைய றுவாண்டா நாட்டு அகதி ஒருவரே தீ பரவச் செய்தமையை ஒப்புக்கொண்டுள்ளார் என அவரது சட்டத்தரணி நீதிமன்றத்திடம் தெரிவித்திருக்கின்றார்.
Nantes நகரில் உள்ள பழமை வாய்ந்த இந்தக் கத்தோலிக்க தேவாலயம் கடந்த 18 ஆம் திகதி காலை தீடீரெனப் பரவிய தீயினால் பலத்த சேதம் அடைந்தது. அங்கிருந்த புராதன ஓவியங்கள், வேலைப்பாடுகள் என்பன தீயினால் அழியுண்டன.
தேவாலயத்தில் பணியில் இருந்த பிரஸ்தாப நபர் அன்றைய தினமே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார்.
நேற்று சனிக்கிழமை இரவு மீண்டும் விசாரணைக்காகப் பொலீஸார் அவரைக் கைது செய்திருந்தனர். இந்நிலையிலேயே அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார் என்று அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கூறியிருக்கிறார்.
இந்தப் பணியாளர் தீ அனர்த்தத்துக்கு முதல் நாள் இரவு தேவாலயக் கதவுகளை அடைப்பதற்குப் பொறுப்பாக இருந்துள்ளார். தேவாலயத்தின் மின்சாரக் கட்டுப்பாட்டுப் பகுதி உட்பட மூன்று இடங்களில் தீ பரவச் செய்தமையை அவர் ஒப்புக் கொண்டுள்ளார் என்று ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள் ளன.
வேண்டும் என்றே தேவாலயத்தில் தீ பரவச் செய்த அவரது நாசச் செயலுக்கு என்ன காரணம் என்ற தகவல் இன்னமும் அறியப்படவில்லை. விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
26-07-2020
ஞாயிற்றுக்கிழமை.
குமாரதாஸன்.