செல்லக்கிளி அம்மான், சந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த லெப்டினட் செல்வநாயகத்துக்கு இயக்கம் சூட்டிய பெயர்கள் இவை. கல்வியங்காடு என்ற இடத்தில் ஏழை விவசாயக் குடும்பத்திலே பிறந்து ஆரம்பக் கல்வியைக் கூடத் தொடர முடியாத நிலையில் கல்வியைக் கைவிட்ட செல்லக்கிளி, ஆரம்பத்தில் அண்ணா கோப்பி விற்பனை வானில் சாரதியாக வேலை பார்த்தான்.
செல்லக்கிளி இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு அறிமுகமான காலத்தில் இருந்தே இயக்க நடவடிக்கைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவன். எந்த வாகனத்தையும் மிகத் திறமையாக ஓட்டும் பயிற்சியைப் பெற்றிருந்த செல்லக்கிளி, ஆயுதங்களாகட்டும், மோட்டார் இயந்திரங்களாகட்டும் பழுதடைந்தால் தானே திருத்தி இயக்கக் கூடிய மிகச் சிறந்த தொழில் நுட்ப அறிவையும் பெற்றிருந்தான். காட்டுப் பாதைகளை அறிவதில் அதிசயிக்கத்தக்க ஆற்றலைக் கொண்டிருந்த செல்லக்கிளி தனது வாழ்க்கையை தான் வாழ்ந்த சூழ்நிலையை ஒரு கெரில்லாப் பயிற்சிக்களமாக ஆக்கிக்கொண்டிருந்தான். ஒரு தடவை உடையார்கட்டுக் குடியேற்றத் திட்டத்தில் காட்டுமரங்களை வெட்டி விவசாயத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் எதிர்பாராமல் வந்த இரண்டு பெரிய கரடிகளில் ஒன்றைக் கோடாரியால் வெட்டிக் கொன்றான். மற்றக்கரடி, கூட இருந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது.
ஒய்வு நேரங்களில் காட்டுப்பகுதிகளில் கட்டுத் துவக்குக் கட்டி மிருகங்களை வேட்டையாடுவது அவனது பொழுது போக்காகும். ஆரம்ப காலங்களில் காடுகளில் இயக்கத்திற்கான முகாம்களை அமைக்கு வேலை நடைபெறும் போதெல்லாம் முகாம்களுக்குத் தேவையான அமைப்புகளைக் கொண்ட மரங்களைத் தேடிக்கண்டு பிடித்து வெட்டுவது, கொட்டில் போடுவது, கூரை வேய்வது போன்ற செயல்கள் அவன் தலைமையில் அவன் மேற்பார்வையில் தான் நடைபெறுவது வழக்கம்.
சிறுவயதில் இருந்தே தனது பெரிய தாயாரின் வீட்டில் வாழ்ந்து வந்தவன் செல்லக்கிளி. அவனது பெரிய தாயாரின் மகன் செட்டி என்ற தனபாலசிங்கம் ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப் போராளியாக இருந்த போதிலும் பின் முழுமையான சுயநலவாதியாகவே மாறினான். அவனது துரோகத்தைக் கண்டு செல்லக்கிளி அவனை அண்ணன் என்று பாராது “அரசியலைத் துற அல்லது என் கையாலேயே நீ சாவாய்” என்று எச்சரித்தான். ஆனால் அவன் திருந்தவில்லை. செட்டியின் செயல் எல்லை மீறவே இயக்கத்தின் தலைவர் பிரபாகரனால் செட்டி சுடப்படுகிறான். செட்டி சுடப்பட்டதற்குப் பின்பும் இயக்கத்திற்கும் பிரபாகரனுக்கும் விசுவாசமாக முழுமையாக தன் உயிரையே தருகிற அளவிற்குச் செயலாற்றினான் செல்லக்கிளி. “செட்டியின் குடும்பத்தைக் காப்பாற்றுவது எனது கடமைதான். அதைவிட இயக்கத்திற்கு நான் ஆற்ற வேண்டிய கடமை பெரிது” இது செல்லக்கிளி உறுதியாக உதிர்த்த வார்த்தைகள்.
இயக்கத்தையும் அவனையும் பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு அவனது பணி இயக்கத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது. இயக்கத்தின் ஆரம்ப காலத்தில் இருந்தே இயக்கம் நடத்திய முக்கிய தாக்குதல் நடவடிக்கைகளிலெல்லாம் பங்கு பற்றியவன் செல்லக்கிளி. முதல் முதலில் இயக்கம் உளவுப்படை பொலிஸ் அதிகாரியான கருணாநிதியை அழித்த நிகழ்ச்சி, பொலிஸ் உளவுப்படை தலைமையகத்தைச் சேர்ந்த பஸ்தியாம்பிள்ளை குழுவினர் மீதான் தாக்குதல், உமையாள்புரம் இராணுவத்தின் மீதான தாக்குதல், பருத்தித்துறை பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரி மீதான தாக்குதல், கந்தர்மடம் வாக்குச்சாவடியில் நடந்த இராணுவத்தினர் மீதான தாக்குதல் என்று இயக்கம் நடத்திய முக்கிய தாக்குதல் நடவடிக்கைகளிலெல்லாம் ஈடுபட்டுத் தன் தனி முத்திரையைப் பதித்தான் செல்லக்கிளி.
பருத்தித்துறை பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரி விஜயவர்த்தனாவைச் இட்டுவிட்டு அவனிடமிருந்து எடுத்த ஜீப் வண்டியை குன்றும் குழியுமாயிருந்த வீதிகளினுடாக 15 மெயில் தூரத்தை 9 நிமிடத்தில் ஓட்டிச் சென்று அந்தத் தாக்குதலில் ஈடுபட்ட இயக்க வீரர்களை இராணுவ முற்றுகைக்குள் படாது வெளிக்கொண்டு வந்த செயல் செல்லக்கிளியின் சாரதீயத் திறமைக்கு எடுத்துக்காட்டாகும். அவன் தலைமையேற்றுச் சிறப்புற நடத்திய இன்னுமொரு தாக்குதல் இரகசியப் பொலிஸ் அதிகாரி பஸ்தியாம்பிள்ளை குழுவின் மீதான தாக்குதலாகும்.
07.04.1978 அன்று அதிகாலை 5.30 மணியளவில் முருங்கன் மடு வீதியின் உட்புறமுள்ள காட்டுக்குள் அமைந்திருந்த மரமுந்திரிகைத் தோட்டத்துக்குள் இருந்த விடுதலைப் புலிகளின் இருப்பிடத்தை முற்றுகையிட்ட உளவுப்படை பொலிஸ் அதிகாரி பஸ்தியாம்பிள்ளை குழுவினர் நிராயுதபாணிகளாக இருந்த விடுதலைப்புலி இளைஞர்களைச் சுற்றி வளைத்தனர். இயந்திரத் துப்பாக்கி, கைத்துப்பாக்கிகள் சகிதம் வந்திருந்த பொலிஸாரிடம் பேச்சுக்கொடுத்து தன் புத்தி சாதுரியத்தால் அவர்களின் கவனத்தை திசை திருப்புகிறான் செல்லக்கிளி. பொலிஸார் சற்று ஏமாந்திருந்த நேரத்தில் விடுதலைப்புலிகள் அனைவரும் ஒன்றாகப் பாய்கிறார்கள் பொலிஸாரின் மேல். அடுத்தகணம் பொலிஸாரிடமிருந்த சில ஆயுதங்கள் விடுதலைப் புலிகள் கைகளுக்கு மாறுகின்றன. முதன்முதலாக அன்றுதான் கையிலெடுத்த எஸ்.எம்.ஜி. செல்லக்கிளியின் கைகளில் வேகமாக இயங்குகிறது. சில நிமிடங்களில் வேட்டுக்கள் தீர்க்கப்படுகிறன. புலிகளை வேட்டையாடவென வந்த பொலிஸ் இன்ஸ்பெக்ரர் பஸ்தியாம்பிள்ளை, சப் இன்ஸ்பெக்ரர் பேரம்பலம், சார்ஜன்ட் பாலசிங்கம், கான்ஸ்டபிள் சிறிவர்த்தனா என ஒவ்வொருவராகச் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இறுதியாக பொலிஸார் கொண்டு வந்த ஆயுதங்களாலேயே அவர்கள் சுடப்பட்டதுடன் அவர்கள் வந்த காரையே எடுத்துக்கொண்டு விடுதலைப் புலிகள் ஆயுதங்களுடன் தப்பிச் சென்றனர். மூன்று நாட்களின் பின்னர்தான் பஸ்தியாம்பிள்ளை கோஷ்டியினரின் முடிவு பற்றிய செய்தி வெளியே தெரிய வந்தது. செல்லக்கிளி தலைமையிலான இந்தத் தாக்குதல் நிகழ்ச்சியானது தமிழ்ப் போராளிகள் மத்தியில் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆபத்து வரும் வெளிகளில் நிதானமாகச் சிந்தித்து வேகமாகச் செயற்படும் தன்மை செல்லக்கிளிக்கு கூடவே பிறந்ததாகும். முன்பொரு தடவை செல்லக்கிளி இருந்த கிராமமான உடையார்கட்டுக்கு செல்லக்கிளியைத் தேடி சப் இன்ஸ்பெக்ரர் தாமோதரம் பிள்ளை சென்ற போது செல்லக்கிளியின் வீட்டிற்கு அண்மையில் செல்லக்கிளியிடம் செல்லக்கிளியைப் பற்றி விசாரித்தான். செல்லக்கிளியோ நிலைமையை உணர்ந்து சற்றும் தடுமாறாது “வாங்கோ ஐயா செல்லக்கிளியின் வீடு பக்கத்திலேதான் இருக்குது கூட்டிக்கொண்டு போய்க் காட்டுறன்” என்று தன் வீட்டுக்கே சப் இன்ஸ்பெக்ரரை அழைத்துச் சென்று காட்டிவிட்டு வேகமாக மறைந்துவிட்டான். அதன் பின்புதான் சப் இன்ஸ்பெக்ரர் செல்லக்கிளி தன்னை ஏமாற்றிவிட்டு தப்பிச் சென்றதைத் தெரிந்து ஆத்திரப்பட்டான்.
தனக்குச் சரி எனப்பட்டதை உதாரணங்கள், பழமொழிகளோடு விளக்கி வாதிடுவது செல்லக்கிளிக்கு கைவந்த கலை. சட்டம் படித்துவிட்டு தமிழினத்தையே ஏமாற்றிக் கொண்டிருந்த கூட்டணி எம்பிக்கள் மத்தியில் நின்று பள்ளிப் படிப்பையே முடிக்காத செல்லக்கிளி “ஆறு ஆண்டுகளாக நாம் காடு மேடு என்று அலைகின்றோம். நீங்கள் முப்பது ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்?” என்று அவர்களின் பொது மேடையிலேயே ஏறி வினா எழுப்பினான். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அபேட்சகர்களைத் தேர்ந்தெடுக்க என தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் கூட்டம் கூட்டப்பட்ட இடத்திற்குச் சென்று தேர்தலைப் பகிஷ்கரிக்கும்படி வாதிட்டான் செல்லக்கிளி. சுயநலமிகள் அவன் வார்த்தையை ஏற்கவில்லை. ஆனால் தமிழீழ மக்கள் செல்லக்கிளியின் கருத்தை உள்ளூராட்சித் தேர்தலை முற்று முழுதாகப் பகிஷ்கரிதத்தன் மூலம் முழுதாக ஏற்றுக் கொண்டனர்.
1983ம் ஆண்டு ஜீன் மாதம் 23ம் நாள் வடமாகாணத்தில் மிகப்பெரிய இராணுவ முகாமிலிருந்து யாழ்ப்பாணம் நகருக்குச் செல்லும் வீதியில் திருநெல்வேலி என்ற இடத்தில் ரோந்து வந்து கொண்டிருந்த இராணுவ வண்டிகள் இரண்டின் மீது செல்லக்கிளி தலைமையிலான பதின்நான்கு விடுதலைப் புலிகள் கொண்ட கெரில்லா அணுகி தனது தாக்குதலை ஆரம்பிக்கின்றது வேகமாக வந்த ஜீப் வண்டி, விடுதலைப் புலிகள் வைத்த கண்ணிவெடி சரியான நேரத்தில் வெடித்ததால் மேலே தூக்கி எறியப்பட்டு கீழே வந்து விழுகிறது. அதில் வந்த சிங்கள இராணுவத்தினர் கீழே குதித்து தாம் வைத்திருந்த துப்பாக்கிகளைத் தூக்கியபடி ஓட முயல்கின்றனர். பின்னால் வந்த இராணுவ ட்ரக் வண்டியிலிருந்த இராணுவத்தினர் பீதியினால் ட்ரக் வண்டிக்குள்ளேயே பதுங்குகின்றனர். விடுதலைப்புலிகளின் துப்பாக்கித் தோட்டாக்களும் வெடிகுண்டுகளும் ட்ரக்கை விட்டு எழமுயன்ற இராணுவத்தினரின் உடல்களைச் சல்லடையாக்குகின்றன. தமிழீழத்தில் முதல் தடவையாக அதிக அளவு சிங்கள இராணுவத்தினர் கொல்லப்படுகின்றனர். இதைக் கண்டு உற்சாக மிகுதியினால் வெற்றிக் களிப்புடன் மறைவிடத்திலிருந்து தான் வைத்திருந்த இயந்திரத் துப்பாக்கிரை இராணுவ வண்டியை நோக்கி இயக்கியபடி எழுந்து நின்று சுடத் தொடங்குகிறான் செல்லக்கிளி. அதேநேரம் ஜீப் வண்டிக்குள் இருந்த சிங்களச் சிப்பாய் ஒருவன் சுட குண்டு நேராகச் செல்லக்கிளியின் இதயத்தை ஊடுருவிச் செல்கிறது. சப்தமெதுவுமின்றிக் கீழே விழுகிறான் செல்லக்கிளி.
13 இராணுவத்தினரை வீழ்த்தி ஏராளமான ஆயுதங்களை எடுத்த உற்சாகத்தில் திளைத்த விடுதலைப் புலிகள் செல்லக்கிளியின் மறைவுச் செய்தியை அறிந்ததும் அதிர்ச்சியடைந்து சோகத்தில் ஆழ்கின்றனர். முதல் வாரத்தில் இரண்டு முன்னோடி வீரர்களை இழந்த விடுதலைப்புலிகள் களத்தில் செல்லக்கிளியையும் இழந்ததால் வெற்றிக்கான எக்களிப்பு சிறிதுமின்றி சோகமே உருவாகத் தம் இருப்பிடம் திரும்புகின்றனர். இயக்கம் வளர்ந்து வரும் நிலையில் இயக்கம் முன்னோடி வீரர்களுக்கு பொறுப்புக்களைக் கொடுத்து அவர்களுக்கு அனுபவப் பயிற்சியைக் கொடுக்கும் வகையில் அந்தத் தாக்குதலுக்கான தலைமையைச் செல்லக்கிளியிடம் ஒப்படைத்துவிட்டு தானும் ஒரு வீரனாகத் தாக்குதலில் கலந்து கொண்ட இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு செல்லக்கிளியின் மறைவு பேரதிர்ச்சியைக் கொடுக்கிறது. எதிர்காலத்தில் செல்லக்கிளியிடம் ஒப்படைக்கக்கூடிய பொறுப்புக்களைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்த பிரபாகரனுக்கு செல்லக்கிளியின் மரணம் இயக்கத்தில் ஒரு பெரிய தேக்கமாகப்படுகிறது. ஆம்! இயக்கத்துக்கு அவன் ஆற்றிய பணிகளைப் பற்றியும் பிரபகரனைவிட வேறு யாருக்கும் முழுமையாகத் தெரிந்திருக்க நியாயமில்லை.
இயக்கம் தொடங்கிய காலத்தில் சுழல் துப்பாக்கி இவைகளை ஈயத்தை உருக்கித் தயார் செய்த காலத்தில் கூட இருந்து உதவியதுடன் பின்னர் இயக்க வீரர்களுக்கு தானியங்கித் துப்பாக்கிகளை வைத்துப் பயிற்சி கொடுக்க வெளியில் இரவு பகலாக அலைந்து குறைந்த விலையில் ஏராளமான ஒரிஜினல் துப்பாக்கி ரவைகளை வாங்கி வந்து சேர்த்தது, இவையெல்லாம் செல்லக்கிளி இயக்கத்துக்குச் செய்த மறக்கமுடியாத் சேவைகளாகும். அன்று செல்லக்கிளி வாங்கி வந்து குவித்த துப்பாக்கி ரவைகளை வைத்தே இயக்கத்தின் முன்னணி வீரர்கள் எல்லாம் சுட்டுப் பயிற்சி எடுக்க முடிந்தது. ஏன் இயக்கத்துக்கென வாங்கப்பட்ட முதல் துப்பாக்கிகூட செல்லக்கிளிக்குச் சொந்தமான இரண்டு மாடுகளை விற்றுக்கிடைத்த பணத்தில் வாங்கப்பட்டதுதான்.
படித்தவர்கள் குழம்பிய காலத்திலும் தான் குழம்பாது இருந்துவந்த செல்லக்கிளியின் கிராம வாசனை தொனித்த வயதுக்கு மீறிய வாதங்களையும், வார்த்தைப் பிரயோகங்களையும் கேட்ட இயக்க வீரர்கள் அவனை “அம்மான்” என்று அன்புடன் அழைத்து வந்தார்கள். அவனது திறமையான மதிநுட்பமான செயலாற்றல்கள் பல விடுதலைக்குப் பின் சரித்திரத்தில் மட்டுமே வெளிவர வேண்டிய செய்திகள். அவனது இறுதிக்காலமானது தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஓர் திருப்புமுனை ஆம்! சரித்திரம் படைத்த செல்லக்கிளி சரித்திரமாகிய நாள், தமிழீழ விடுதலைக்கான அகிம்சைப் போராட்டமானது ஆணி வேரோடு பிடுங்கி எறியப்பட்டு ஆயுதப் போராட்ட சகாப்தம் உருவான நாள்.
- எரிமலை (ஆடி 1997) இதழிலிருந்து
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
( நன்றிபோர்ப்படகு பரந்தாமன்)