“இட ஒதுக்கீடு பிச்சையல்ல. அடிப்படை உரிமை. தமிழ்ச் சமூகம் ஒரு மாபெரும் போராட்டத்திற்குத் தயாராக வேண்டும்.”
வ.கௌதமன்
இட ஒதுக்கீடு என்பது பிச்சையல்ல. இந்த மண்ணின் பூர்வகுடி மக்களுக்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் முறைப்படி தந்திருக்கும் அடிப்படை உரிமை.
ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்றால் முதலில் அவர்களிடத்தில் இருக்கும் கல்வியை கைப்பற்ற வேண்டும் என்றான் அடால்ப் ஹிட்லர். இங்கே ஹிட்லரையும் விட மிக மோசமான மன நிலையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச்(ஓ.பி.சி) சேர்ந்த மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீட்டினை அறமற்ற முறையில் அபகரித்து உயர்சாதியினரிடம் ஒப்படைத்திருக்கும் மத்திய அரசின் போக்கிற்கு அடி வயிற்றின் பெரு நெருப்போடு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
நாடார், கோனார், வன்னியர், தேவர், முதலியார், முத்தரையர், செட்டியார், சேர்வையர்
கவுண்டர், உடையாரென்று எம் மண்ணின் பூர்வகுடியான 252 தமிழ் சமூக மக்களின் 60 சதவிகித்திற்கும் மேலான அடிப்படை கல்வி உரிமைகளை வலுக்கட்டாயமாக பிடுங்கி வெறும் 3 சதவிகிதமுள்ள உயர்சாதியினரிடம் தந்து அவர்கள் அத்தனையையும் அனுபவிப்பதென்பது மானுடம் சகித்துக்கோள்ள முடியாத மாபெரும் வன்முறை.
இப்போது நமக்கு இல்லாமல் போன 11,027 மருத்துவ இடங்கள் மட்டுமல்லாமல் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 40,842 க்கும் மேற்பட்ட நம் பூர்வகுடி மாணவர்களின் இருக்கைகளை அபகரித்து அவர்களின் மருத்துவ கனவில் அமிலத்தை ஊற்றி அழித்துவிட்டது இந்திய ஒன்றிய அரசு. நடக்கும் இத்தனை கொடுமைகளையும் மத்திய அரசின் நகலாக விளங்கிக் கொண்டிருக்கும் நம் தமிழக அரசும் கண்டு கொள்வதில்லை. என்பதுதான் வேதனையிலும் வேதனை. மத்திய மாநில அரசுகளின் நேர்மையற்ற இப்போக்கினை தமிழ்நாட்டின் எதிர் கட்சிகளும் வேடிக்கை பார்ப்பது ஞாயமல்ல.
இதர பிற்படுத்தப்பட்டோரிடம் தொடங்கியுள்ள இந்த அதிகாரப் போர் எதிர்காலத்தில் பட்டியல் இன மக்களிடமும் அத்து மீறும் என்பதில் எந்த வித ஐயப்பாடும் இல்லை. ஒரே நாடு ஒரே தேசம் என கூப்பாடு போடுகிற அதிகார வர்க்கம் இப்போது கல்வி உரிமை மறுக்கப்பட்டுள்ள இவர்களுக்குள்ளும் பெரும் சதவிகிதத்தினர் இந்துக்கள்தான் என்பதில் ஏன் முரண்படுகிறது?. காரணம் 3 சதவிகிதமுள்ள உயர்சாதி இந்துக்களை காக்கவும் 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட இந்த மண்ணின் பூர்வகுடி இந்துக்களை தாக்கவும், தேவைப்பட்டால் அவர்களை அழித்தொழிக்கவும் அடியாட்களாக அடிமை இந்துக்கள் தேவை. இதனையறியாத மேற்கண்ட தமிழ் சமூகங்களும் தங்கள் தலைகளை தாங்களே கொண்டு சென்று அவர்களின் பலிபீடத்தில் கச்சிதமாக பொருத்திக்கொள்கிறார்கள். அவர்களின் கொடூர திட்டமெல்லாம் இந்த மண்ணின் பூர்வகுடிகளை மீண்டும் அவர்களது குலத் தொழிலுக்கே அனுப்ப வேண்டும் என்பதுதான்.
ஆடு மேய்த்தல் தொடங்கி அன்றாடம் நெருப்பில் உருகும், உழைக்கும் வர்கக்கமாய் திகழும் இச்சமுக மக்களின் உரிமைகளை சுரண்டுகிற அதிகார வர்க்கத்தினர் என்றைக்காவது கால் நடைகளை மேய்த்ததுண்டா? அன்றாடம் காய்ச்சியைப்போல் ஊதியத்திற்காய் உடலை வருத்திக் கொண்டதுண்டா? எல்லா அடிமட்ட வேலைகளையும் இவர்களை செய்ய விட்டு இவர்களின் உழைப்பில் சுகபோக வாழ்க்கை வாழும் மனநிலை என்பது எவ்வளவு பெரிய கொடுமை?.
தமிழினத்தின் கலை கலாச்சாரத்தை பழிப்பவர்களாக இருந்தாலும் சரி எம்மினத்தின் உரிமைகளை பறிப்பவர்களாக இருந்தாலும் சரி “முருகன் குடி”யான எங்கள் தமிழ்க்குடியின் இளைய தலைமுறை இனியும் தொடர்ந்து வேடிக்கை பார்க்காது என்பதை சம்மந்தப்பட்டவர்களுக்கு தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக எச்சரிக்கையினை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இருக்கின்ற உரிமைகளை காக்கவும் இழந்த உரிமைகளை மீட்கவும் மாணவர்கள், இளைஞர்களோடு மானமுள்ள தமிழர்களை இணைத்துக்கொண்டு ஜல்லிக்கட்டை போன்றதொரு மாபெரும் போராட்டத்திற்கு தமிழினம் தயாராக வேண்டுமெனவும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.
வ.கௌதமன்
பொதுச் செயலாளர்,
தமிழ்ப் பேரரசு கட்சி,
“சோழன் குடில்”
21.07.2020