தமிழகத்தில் தொடரும் ஓட்டுனர்களின் தற்கொலைகள்.
தடுத்து நிறுத்த தமிழக அரசு முன்வரவேண்டும்.
வ. கௌதமன்.
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் அன்றாட வாகன ஓட்டிகளின் இயல்புநிலை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வாகனத்தை ஓட்டுகிறவர்கள் தங்களின் வாழ்க்கையை ஓட்ட முடியவில்லையே என்கிற நிலையெடுத்து தங்களைத் தாங்களே மாய்த்துக்கொள்கின்ற செய்தி அதிர்ச்சியளிப்பதோடு பெரும் கவலையடைய செய்கிறது. தற்கொலை செய்து கொள்கின்ற ஒவ்வொரு உயிருக்குப் பின்னாலும் ஒரு குடும்பம் இருக்கிறது என்பதை தாய்மை உணர்வோடு தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஊரடங்கு காலத்தில் வங்கிகளின் வட்டி கொடுமை தாங்க முடியாமலும், வருமானம் இல்லாததால் அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டு பசி பட்டினியாலும் ஓட்டுனர்கள் பலர் தற்கொலையில் ஈடுபடுவது அதிகரித்துக் கொண்டே வருகிறது. வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட சாலை வரியை முற்றிலுமாக இரத்து செய்தல், ஒவ்வொரு ஓட்டுனருக்கும் அவசரகால உதவித்தொகை வழங்குதல், காலாவதியான ஓட்டுனர் உரிமம் உட்பட வாகன ஆவணங்களை புதுப்பிக்க மேலும் ஆறு மாத காலம் அவகாசம் வழங்குதல், வாடகை வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இ.எம்.ஐ (EMI) வட்டிகளை உடனடியாக நீக்குதல் போன்ற கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும்.
மத்திய மாநில அரசுகள், வாகனங்களுக்கான மாதத்தவணைகளை (E.M.I) மூன்று மாதத்திற்கு கட்ட வேண்டாமென்று சலுகையாக அறிவித்த போதிலும் , அந்த தவணை மற்றும் வட்டித் தொகைகள் அசலில் சேர்க்கப்பட்டு அதற்கும் சேர்த்து பிற்காலத்தில் பல்லாயிரங்களை அபராதம் போன்று அதிகமாகக் கட்ட வேண்டி வருமென்று வங்கிகளும், நிதி நிறுவனங்களும் அறமற்ற முறையில் பகிங்கரமாக மிரட்டுவது அரசுகளுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. அப்படிப்பட்ட வங்கிகளின் மிரட்டல் குறித்து அரசுகளின் நிலைப்பாடு என்ன என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் கார், ஆட்டோ, மேக்ஸி கேப் உரிமையாளர்கள் கிட்டத்தட்ட ஒன்பது லட்சம் பேர் வாகனத்தின் உரிமையாளர்களாக இருக்கின்றனர். அவர்களை நம்பி பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் இருக்கின்றனர். இந்த ஊரடங்கு காலத்தில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் 144 தடை உத்தரவை மீறியதாக காவல்துறையினரால் சிறை பிடிக்கப் பட்டுள்ளது. இதில் 1,30,000 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்களுக்கு 500, 1000 என்று அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல ஓட்டுனர்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
மயிலாடுதுறையில் ஆழ்வார் ரவி,
வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்ததால் சென்னையில் ஹரி,
கும்பகோணத்தில் கண்ணன் ,
வேலூரில் கணவனோடு சேர்த்து மனைவி என இதுவரை13 க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் தற்கொலை செய்துள்ளனர்.
இதனால் சக ஓட்டுனர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். எனவே தற்கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டிய மிக முக்கிய இடத்தில் தமிழக அரசு உள்ளது. நலிவடைந்துள்ள, பொருளாதாரத்தில் மிகப்பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள ஓட்டுனர்களுக்கு இதுவரைக்குமான உதவித்தொகையாக 20,000 ரூபாய் வழங்க அரசு முன் வருவதுடன், தமிழகத்தில் உள்ள அனைத்து வாகன தொழிற்சங்கத்தினரையும் அழைத்து பேசி அவர்களின் குறைகளை நிரந்தரமாக தீர்த்து கார், மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வில் புத்துயிர்ப்பினை ஏற்படுத்திட வேண்டுமென தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.
வ.கௌதமன்
பொதுச் செயலாளர்,
தமிழ்ப் பேரரசு கட்சி.
“சோழன் குடில்”
19.07.2020