பிரான்ஸின் மேற்குப்பகுதியில் அமைந்து ள்ள Nantes நகரில் பழமைவாய்ந்த தேவாலயம் ஒன்றில் இன்று காலை பரவிய பெரும் தீ கட்டுப்பாட்டில் கொண்டுவரப் பட்டுள்ளது. நாசகாரச் செயலே இந்த விபத்துக்குக் காரணமாய் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
காலை வேளை Saint-Pierre-et-Saint-Paul தேவாலயத்தின் உயர்ந்த முகட்டுப் பகுதியில் மூண்ட தீயின் கரும்புகை மேலெழுகின்ற காட்சிகள் சமூக வலைத் தளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. ஓராண்டுக்கு முன்னர் பாரிஸ் நகரில் Notre-Dame மரியன்னை பேராலயம் தீக்கிரையான சம்பவத்தை இக் காட்சிகள் மீள நினைவுபடுத்தி இருக்கின்றன என்று ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
காலை ஏழு மணி45 நிமிடமளவில் தேவாலய கோபுரத்தில் தீ தென்பட்டதை அடுத்து தீயணைப்பு பிரிவினர் அழைக்கப்பட்டனர். நூற்றுக் கணக்கான வீரர்கள் 45 வாகனங்கள் சகிதம் விரைந்து வந்து தீயணைப்புப் பணியில் ஈடுபட்டனர். உயர்ந்த ஏணிகள் வழியே ஏறி கடும் பிரயத்தனத்தின் மத்தியில் துணிகரமாகச் செயற்பட்டு தீயைக் கட்டுப்படுத்தினர்.
16 ஆம் நூற்றாண்டு காலப்பகுதிக்கான கட்டட வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த தேவாலயத்தின் முழுக் கட்டமைப்பையும் பாதிப்பதற்கு முன்பாகத் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் கண்ணாடி கலையம்சங்களுடன் கூடிய கோபுரக் கூரையின் ஒரு பெரும் பகுதி தீயினால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
பூர்வாங்க தடய விசாரணைகள் மூன்று இடங்களில் இருந்து தீ பரவியிருப்பதை உறுதிப்படுத்தி உள்ளன. இது வேண்டும் என்றே செய்யப்பட்ட ஒரு நாசகாரச் செயல் என்ற கோணத்திலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று தகவல் வெளியாகி உள்ளது.
அனர்த்தத்தில் சிக்கிய தேவாலயத்தைப் பார்வையிட பிரதமர் Jean Castex இன்றுமாலை Nantes நகருக்கு விரைகிறார். அவருடன் உள்துறை அமைச்சர் Gérald Darmanin, கலாசாரத் துறை அமைச்சர் Roselyne Bachelot ஆகியோரும் உடன் செல்கின்றனர்.
Nantes நகரத்தின் இருதயம் போன்ற இந்த தேவாலயத்தை Gothic கட்டடக்கலை சகாப்தத்தின் விலைமதிப்பற்ற ஓர் ஆபரணம் என வர்ணித்துள்ள அதிபர் மக்ரோன், அதனைப் பாதுகாக்கப் போராடிய வீரர்களுக்கு தனது ஆதரவை ரூவீற்றர் மூலம் வெளியிட்டிருக்கிறார்.
முன்பொரு தடவை 1972 ஆம் ஆண்டில் திருத்த வேலைகளின் போது இந்த தேவாலயம் பெரும் தீ அனர்த்தத்தில் சிக்கி புனரமைப்புக்காக 13 வருடகாலம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
18-07-2020
சனிக்கிழமை
குமாரதாஸன்.