இளையோர்கள் மத்தியில் சமூக சேவை அவசியம்!

0
401

இன்று அதிகளவான இளையோர்கள் மத்தியில் சமூக அக்கறை இன்மையே பெரும் பிரச்சினைகளுக்கு வழி வகுக்கின்றது என்றே சொல்லலாம். பாடசாலை மட்டத்திலும் சரி, கிராமிய மட்டங்களிலும் சரி இளையோர்களுக்கான நல்ல ஒரு சிறந்த விழிப்புணர்வுப் பாசறை இன்று அவசியமாக உள்ளது.

நாம் கடந்து வந்த பாதைகளைத் திரும்பிப் பார்ப்போமாயின், பாடசாலை மட்டத்தில் எத்தனையோ நலன்சார் அமைப்புக்கள் மாணவர்களின் மத்தியில் இயங்கின. சாரணர் அமைப்புக்கள், நலன்புரி அமைப்புக்கள், மாணவர் அமைப்புக்கள், இன்ரர் கழகங்கள், ஒவ்வொரு மதசார்பு அமைப்புக்கள் எனப் பல்வேறு பட்ட சமூக சிந்தனையுள்ள அமைப்புக்கள் இயங்கின. சில இன்னும் இயங்கிக்கொண்டுதான் உள்ளன.

ஓர் இளைஞர் இவ்வாறான பல அமைப்புக்களில் கூட அங்கம் வகித்திருக்கமுடியும். ஆனால், ஏதாவது ஒரு சமூக சேவை அமைப்பிலாவது உங்கள் பிள்ளைகள் அங்கம் வகிக்கின்றார்களா என்பதை பெற்றோர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இவ்வாறான அமைப்புகளில் அங்கம் வகித்த பிள்ளைகள் தவறான பாதைகளுக்குத் தம்மை இட்டுச்செல்வதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவே.

g

சில பெற்றோர்கள் தமது பிள்ளைகள் விரும்பினாலும் இவ்வாறான அமைப்புக்களில் தமது பிள்ளைகளை இணைக்க முன்வருவதில்லை. அதனால் அவர்களின் நல்ல சமூக சிந்தனை முளையிலேயே கிள்ளி எறியப்படுகின்றது.  சிலர், தாம் தமிழ் கட்டமைப்புக்களில் இருந்தாலும் தமிழ் சார்ந்த விடயங்களில் தமது பிள்ளைகளை இணைக்க பின்னடிக்கின்றார்கள். தமிழர்களோடு எமது பிள்ளைகள் சேருவதில்லை. தமிழர்களோடு சேர்ந்தால் கெட்டுவிடுவார்கள் என்ற சிந்தனையுள்ள பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். சரி புலத்தின் விடயத்தினைப் பார்ப்பதற்கு முன்னதாக தாயகத்திற்கு ஒரு முறை சென்று வருவோம்.

u

தாயகத்தில் இன்று இளைஞர்களின் வீதி விபத்து மரணங்கள் மிகவும் உச்சத்திற்கே சென்றுவிட்டன. கொரோன உள்ளிருப்புக் காலத்தில் எமது தமிழ் பத்திரிகைகள் எல்லாம் மின்னிதழ்களாக வெளிவந்து கொண்டிருப்பதால் புலம்பெயர் தேசங்களிலும் இந்த நாளிதழ்களை தவறாமல் பலரும் பார்க்க ஆரம்பித்துள்ளனர். நீண்டகால இடைவெளிகளின் பின்னர் புலம்பெயர் தேசத்தில் மின்னிதழ்களை பார்க்க ஆரம்பித்த குடும்பப் பெண் ஒருவர், இவ்வாறு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றார். நான் ஆசையோடு இந்தப் பத்திரிகைகளைப் பார்க்க ஆரம்பித்தேன். ஆனால், ஒவ்வொரு பத்திரிகைகளிலும் குறைந்தது தாயக இளைஞர்களின் மூன்று  அகால மரணங்கள் முன்பக்கத்தை நிரப்பி நிற்கின்றன. இது எனக்கு மிகவும் வேதனையை ஏற்படுத்துகின்றது என்றார்.

h

இதுதான் இன்றைய தாயக நிலைமை, விபத்துக்களைத் தவிர்ப்பதற்கு பலரும் பல்வேறான கருத்துக்களை முன்வைத்துக்கொண்டுதான் உள்ளனர். ஆனாலும் எல்லாவற்றையும் மீறி விபத்து மரணங்கள் ஓய்ந்தபாடில்லை.

கடந்த வாரம் பூநகரிப் பகுதியில் உந்துருளி விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவனின் இறுதி நிகழ்வில் அவனுடைய திறமைகள் அனைத்தையும் அவரது உருவப்படத்தின் முன்வைத்துக் காட்சிப்படுத்தியிருந்தனர். அந்த மாணவன் ஒரு சிறந்த விளையாட்டு வீரன். கண்மூடித்தனமான பாரவூர்தி ஓட்டுநர்களால் பல உயிர்கள் இவ்வாறு காவுகொள்ளப்படுகின்றன. அத்தோடு, யுத்தத்தாலும் கொரோனாவாலும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் மாடுகள், ஆடுகள் போன்ற உயிரினங்களும் படுகொலை செய்யப்படுகின்றமையையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

h

அவர்கள் தமிழர் தாயகத்தின் மணலையும் கொள்ளையடித்து தமிழர் இளம் சந்ததிகளையும் காவுகொள்கின்றனர். சமூக சிந்தனையோடு பயணிப்பதன்மூலமே இவ்வாறான திடுநேர்கைகளைத் தவிர்த்துக்கொள்ளலாம்.  தற்போது மண்கொள்ளையர்களின் அட்டகாசம் தேர்தல் கால சுதந்திரம் என்றே சொல்லப்படுகின்றது. குறித்த பார ஊர்தியின் பயணிப்பும் வேகமும் அதிகரித்துள்ளது என்றும்  குறித்த வாகனத்தை எமன் வருகின்றது என்றே பொதுமக்கள் பேசிக்கொள்வதாகவும் தெரிய வருகின்றது. குறித்த பாரவூர்திகள் பயணிப்பதற்கு குறிப்பிட்ட நேரங்களை ஒதுக்குவதற்கு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ள போதும் அது நடைமுறைக்கு வரும் சாத்தியங்கள் இன்னும் குறைவாகவே உள்ளன. 

இந்நிலையில் புலம் பெயர் தேசங்களில் பிறந்த தமிழ் இளையோர்கள் பல பணிகளையும் முன்னெடுத்து வருகின்றமையையும் இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். பல நாடுகளிலும் இளையோர்கள் கொரோனா உள்ளிருப்பு நிவாரணப் பணிகளிலும், கொரோனா தொற்று உறுதிப்படுத்தலுக்கு தமிழ் மக்களின் வாழிட மொழிப்பிரச்சினை காரணமாக தமிழ் மக்களுக்கு தொலைபேசி வழியாக பல உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்கியிருந்தனர்.

பிரான்சில் தமிழ் இளையோர் அமைப்பினர் தமிழ் மக்களின் குட்டி யாழ்ப்பாணம் என்று வர்ணிக்கப்படும் பரிஸ் லாச்சப்பல் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், தமிழீழ தேசத்தின் தடை நீக்கிகள் நாள் நிழைனவேந்தலை முன்னிட்டு இரண்டு தடவைகள் சுத்திகரிப்பு மற்றும் சுகாதாரப் பணிகளை முன்னெடுத்திருந்தனர். இது பலரையும் கவர்ந்திருந்தது. இவர்களை எடுத்துக்காட்டாக வைத்து பல நாடுகளும் தமது இளையோர்களை வழிப்படுத்தியிருந்தனர்.

t

இந்நேரத்தில், குறித்த இளையோர்களின் பணிகுறித்து முகநூலில் வந்த இடுகை ஒன்றைப் பார்ப்போம்.

இன்று (05.07.2020)  எமது பகுதியில் (லாச்சப்பல்) தமிழ் இளையோர் அமைப்பினர்  நிலத்தில் வீசப்பட்டுருந்த தேவையற்ற பொருட்களை பொறுக்கி எடுத்துச் சுற்றுச் சூழலை சுத்தம் செய்துள்ளனர். உண்மையில் ஒரு சிறப்பான உன்னதமான ஒரு செயற்பாடு. எம்மவர்கள் எதையும் ஊரில் நிலத்தில் போடுவது போல் சர்வ சாதாரணமாக இங்கும் நடைபெறுகின்றது. இதைப் பார்க்கும் வேறு நாட்டு மக்கள் முகம் சுளிப்பதைப்பார்க்க எமக்கு வெட்கமாக உள்ளது. அப்படி இருக்கும் போது சம்மந்தமே இல்லாத இவர்கள் வந்து சுத்தம் செய்வது எல்லோருக்கும் ஒரு சாட்டை அடியான நடவடிக்கை. இவர்களுடைய பணிதொடர வேண்டி வாழ்த்துகிறோம்.

என்று அந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லா விடயங்களையும் சிறப்பாகக் கூறிவிட்டு “சம்பந்தமே இல்லாதவர்கள்” என்ற கூற்று பலவாறு சிந்திக்க வைக்கின்றது.

இன்று பலரும் ஒதுங்கி சம்பந்தமே இல்லாமல் தான் வாழ்கின்றார்கள். எமது தேசம், எமது மக்கள், எமது மொழி என்ற நிலை கடந்து சம்பந்தமே இல்லாதவர்கள் தான் எமது மக்களுக்காக எமது தாயக விடிவிற்காக தமது உயிர்களையே ஆகுதியாக்கியுள்ளார்கள். புலத்தில் எங்களின் வதிவிட உரிமைக்காக மட்டும் தான் அவர்கள் எமக்கு சம்பந்தம் ஆக்கப்பட்டுள்ளார்கள்!  

கந்தரதன்

நன்றி: ஈழமுரசு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here