பிரெஞ்சு விமானப்படை விமானங்கள் நாட்டின் பல மருத்துவமனைகளின் மேலாக வான்பரப்பில் தேசிய மூவர்ணங்களை வெளியேற்றியவாறு அணிவகுத்துப் பறந்துள்ளன.
மருத்துவப்பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த வான்படை அணிவகுப்புகள் நடத்தப்பட்டன என்று பிரெஞ்சு விமானப் படையின் விசேட ஆகாய அணிவகுப்புப் பிரிவான La Patrouille de France தெரிவித்திருக்கிறது.
நேற்று முன்தினம் இடம்பெற்ற நாட்டின் தேசியதினக் கொண்டாட்ட அணிவகுப்பு களின் தொடர்ச்சியாக இந்த வான் பறப்புகள் நடத்தப்பட்டுள்ளன.
பாரிஸ் பிராந்தியத்தில் hôpitaux Bichat மற்றும் Avicennes, Bégin, les centres hospitaliers Sud Francilien, Versailles, Pontoise ஆகிய மருத்துவமனைகள் மீது நேற்று மாலை 4 மணிமுதல் இவ்வாறு விமானங்கள் அணிவகுத்து பறந்தன என்று செய்தி வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட பிராந்தியங்களில் உள்ள மருத்துவமனைகள் மீது இன்றும் மரியாதை நிமித்தமான இந்த விமான அணிவகுப்புகள் இடம்பெறவுள்ளன.
‘கொவிட் 19’ வைரஸுக்கு எதிரான நீண்ட போரில் ஈடுபட்ட சுகாதாரத் துறையினருக்கு நாட்டின் முழு ஆதரவையும் வெளிப்படுத்து வது இதன் நோக்கம் என்று La Patrouille de France தெரிவித்திருக்கிறது.
(படம் 1:பாரிஸ் Bichat மருத்துவமனைமீது விமானங்கள் மூவர்ணங்களை உமிழ்ந்தவாறு அணிவகுத்துப்பறந்த காட்சியை மருத்துவப் பணியாளர்கள் பார்வையிடுகின்றனர். படம் 2:La Patrouille de France படைப்பிரிவினர்.)
16-07-2020
வியாழக்கிழமை.
குமாரதாஸன்.